சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞர் கடந்த மார்ச் 8ஆம் தேதி காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆகாஷின் உடற்கூராய்வு அறிக்கையில், 28 காயங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ராமநாதபுரம் டிஐஜி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் திலீபன், எஸ்.ஐ குகன், காவலர்கள் தெய்வேந்திரன், சரத்குமார், மனோகரன், காலீஸ்வரன் ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, ஆகாஷின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் தொடர்ந்து 65நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையினருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்திக் சிதம்பரம் ஆகாஷின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து இரண்டு தினங்களுக்கு முன் ஆறுதல் தெரிவித்தார்.
தொடர்ந்து, குடும்பத்தினரின் கோரிக்கைகளை கேட்டறிந்த அவர், அவற்றை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களிடம் எடுத்துரைத்து கடிதம் எழுதுவதாக தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் எம்.பி., கார்த்திக் சிதம்பரம் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், காவல்துறையினரின் தாக்குதலால் உயிரிழந்த ஆகாஷின் வழக்கை உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.