நகை மாயமான புகாரில் காவல் துறையால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் என்ற இளைஞர், அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் அஜித் குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருந்தனர். அஜித்குமாரின் சகோதரருக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணையை வழங்கிய அமைச்சர் பெரியகருப்பன், சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அஜித் குமாரின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து அஜித் குமாரின் புகைப்படத்திற்கும் அஞ்சலி செலுத்தியிருக்கிறார். தவெக நிர்வாகிகள் ஏற்கனவே அஜித்குமாரின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருக்கும் நிலையில், தற்போது அக்கட்சியின் தலைவர் விஜயும் நேரில் சென்று ஆறுதலைத் தெரிவித்திருக்கிறார். இதற்கு முன்பாக அறிக்கை வாயிலாக கண்டனங்களைத் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அஜித் குமாரின் தாயாரிடம், நிவாரணமாக ரூ.2 லட்சம் வழங்கிய விஜய், “நீதி விசாரணை உண்மையாக நடக்க வேண்டும்.. அதற்கு நாங்கள் துணைநிற்போம்” எனத் தெரிவித்திருக்கிறார். விஜய் நேரில் வந்தது தொடர்பாக பேசிய அஜித் குமாரின் தாயார், “ஸ்டாலின், எடப்பாடி போன்று விஜய் போனில் ஆறுதல் கூறுவார் என நினைத்தோம். விஜய் வருவார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, விஜய் அஜித்குமாரின் வீட்டிற்கு வருகிறார் என்ற தகவல் வெளியில் கசியாமல் பார்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. எவ்வித ஆரவாரமும் இல்லாமல், கட்சிக்காரர்கள் யாருமின்றி வந்து அஜித்குமாரின் தாயார் மற்றும் சகோதரரிடம் தனது ஆறுதலைத் தெரிவித்திருக்கிறார்.
விஜய் வந்திருக்கிறார் என்ற தகவல் காட்டுத்தீ போல் இந்த இடத்தில் பரவத் தொடங்கியிருக்கிறது. உள்ளூர் மக்கள் அஜித்குமார் வீட்டு வாசலில் கூட ஆரம்பித்தனர். இதன் காரணமாக 5 நிமிடங்களுக்குள் விஜய் அஜித் குமாரின் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார்.