டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து ஏன் என்பது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கிடையே பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவில் நாளுக்கு நாள் உட்கட்சி விவகாரம் பூதாகரமாகி வருகிறது. முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான செங்கோட்டையன், பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளருக்கு கோரிக்கை வைத்திருந்தார். பின்னர், அதுதொடர்பாக அவர் டெல்லி சென்று அமித் ஷாவைச் சந்தித்ததாகவும் கூறப்பட்டது. பின்னர் செங்கோட்டையன் கருத்து தொடர்பாக பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, அடுத்த நாளே டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின்போது, தமிழக அரசியல் நிலவரம், கூட்டணி விவகாரம் தொடர்பாக அமித் ஷாவுடன் பழனிசாமி ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. அதேநேரம், செங்கோட்டையன், டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதிமுக நிர்வாகிகள் வெளியேவந்த பிறகு, பழனிசாமி மற்றும் அமித் ஷா மட்டும் சில நிமிடங்கள் தனியாக ஆலோசனை மேற்கொண்டனர். மறுபுறம், திமுக அமைச்சர்கள் மீதான அமலாக்கத்துறை வழக்குகளின் விசாரணையை வேகப்படுத்த கோரிக்கை வைத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பின்னர் அவரைச் சந்தித்துவிட்டு வெளியே வந்தபோது எடப்பாடி பழனிசாமி கைக்குட்டையால் முகத்தை மூடியபடியே காரில் சென்றார். அவரின் இந்தச் செயல் தமிழகத்தில் கடுமையான விவாதங்களையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியது. அவர் முகத்தை மூடிச் சென்றதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அமைச்சர் ரகுபதி உள்ளிட்டோர் கடுமையாகச் சாடியிருந்தனர்.
இந்த நிலையில், டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து ஏன் என்பது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தேச விடுதலைக்காக பாடுபட்ட தெய்வத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என அதிமுக சார்பில் கோரிக்கை வைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.