பிரசாரத்திற்கு மத்தியில் ஆம்புலன்ஸ் விடப்படுவதாகக் கட்சித் தலைவர்கள் மத்தியில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. அன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறிய நிலையில், இன்று தேர்தல் பிரசார கூட்டத்தின் நடுவே ஆளுங்கட்சியினர் திட்டமிட்டு ஆம்புலன்ஸ்களை அனுப்புவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்த செய்திகளை அலசுகிறது இந்தக் கட்டுரை.
தமிழ்நாட்டில், அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து, கட்சிகளின் சார்பில் மாநிலம் முழுவதும் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இந்தப் பிரசாரத்திற்கு மத்தியில் ஆம்புலன்ஸ் பற்றிய விவகாரமும் விவாத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது தேர்தல் பிரசார கூட்டத்தின் நடுவே ஆளுங்கட்சியினர் திட்டமிட்டு ஆம்புலன்ஸ்களை அனுப்பி இடையூறு செய்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியிருந்தார்.
அடுத்தமுறை ஆம்புலன்ஸில் நோயாளியை ஏற்றிக்கொண்டு வரவேண்டும். அடுத்தமுறை இப்படி வந்தால், ஆம்புலன்ஸ் ஓட்டி வரும் ஓட்டுநரே, நோயாளியாக மருத்துவமனைக்குப் போக வேண்டிய நிலை வரும்எடப்பாடி பழனிசாமி
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் பரப்புரைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றிக் கொண்டிருந்தபோது ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. அதனைக் கண்டதும், “வண்டியில் ஆள் இருக்கா இல்லையா” எனக் கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, ஆவேசம் அடைந்தார். அதற்குள் கீழே இருந்த அதிமுக கட்சித் தொண்டர்கள், உணர்ச்சிவசப்பட்டு ஆம்புலன்ஸைத் தாக்கினர். உடனே, அவர்களைத் தாக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, வாகனத்தின் எண்ணைக் குறித்துவைத்துக்கொண்டு, காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சொல்லி அறிவுறுத்தினார். மேலும் அவர், ”ஒவ்வொரு முறை நான் பிரசாரம் செய்யும்போதும், இடையில் ஆம்புலன்ஸ் விடுகிறது இந்தக் கேவலமான அரசு. அந்த ஆம்புலன்ஸில் ஆளே இல்லை. இதுவரை 30 கூட்டங்களில் இப்படி நடந்திருக்கிறது. அடுத்தமுறை ஆம்புலன்ஸில் நோயாளியை ஏற்றிக்கொண்டு வரவேண்டும். அடுத்தமுறை இப்படி வந்தால், ஆம்புலன்ஸ் ஓட்டி வரும் ஓட்டுநரே, நோயாளியாக மருத்துவமனைக்குப் போக வேண்டிய நிலை வரும்” என பகிரங்க எச்சரிக்கை விடுத்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், பலரும் அவருக்கு எதிராக கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர்.
ஆம்புலன்ஸ் விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்துள்ள மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆம்புலன்ஸ் செல்லும் பிரதான சாலைகளில் அவர் கூட்டம் போடுவதாகக் குற்றஞ்சாட்டி உள்ளார். முன்னாள் முதல்வராக இருந்துகொண்டு ஆம்புலன்ஸ் ஊழியர்களை மிரட்டும் தொனியில் பேசுவது, அநாகரீகமானது எனச் சாடியுள்ளார். இதுபோன்ற செயல்களை நிறுத்திக்கொள்வது நல்லது என்றும், தொடர்ந்து இதைச் செய்வது அவரது தரத்தை குறைத்துவிடும் என மா.சுப்பிரமணியன் விமர்சித்துள்ளார்.
ஆம்புலன்ஸ் ஊழியர்களை மிரட்டும் தொனியில் பேசுவது, அநாகரீகமானது. இதுபோன்ற செயல்களை நிறுத்திக்கொள்வது நல்லதுமா.சுப்பிரமணியன், சுகாதாரத் துறை அமைச்சர்
ஆம்புலன்ஸ் விவகாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி முன்வைத்த குற்றச்சாட்டை 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சந்திரா என்பவருக்கு உடல்நிலை மோசமடைந்ததாகவும், அவரை வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவே பள்ளிகொண்டாவில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அணைக்கட்டு மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் வேறு ஒரு நோயாளிக்காகச் சென்றிருந்ததால், பள்ளிகொண்டாவில் இருந்து ஆம்புலன்ஸ் அழைத்து வரப்பட்டதாகக் கூறி உள்ளது.
அதேபோல், தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் எடப்பாடி பழனிசாமிக்கு தங்களது கண்டனம் தெரிவிப்பதாக ஓர் அறிக்கை இணையத்தில் வைரலானது. ஆனால், அதனை தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் மறுத்துள்ளது.
பல சமயங்களில் ஆளே இல்லாமல், தேவையில்லாமல் பல ஆம்புலன்ஸ்கள் கூட்டத்திற்கு இடையே கடந்து செல்லும். அது வேறு விதமான அரசியல்கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் தலைவர்
முன்னதாக மக்கள் நீதி மய்யம் தலைவரும் மாநிலங்களவை எம்பியுமான கமல்ஹாசன், “நான் பொதுக் கூட்டங்களில் பேசிக் கொண்டிருக்கும்போது ஆம்புலன்ஸ்கள் கடந்துசென்றால் வழிவிடச் சொல்லுவேன். ஓர் உயிரைவிட அரசியல் முக்கியமில்லை. அரசியலால் பல உயிர்கள் போய்க் கொண்டிருக்கின்றன. இதில் நாமும் நமது பங்கிற்கு அதைச் செய்ய வேண்டாம். அதற்குப் பெயர் அரசியலும் இல்லை. அந்த ஆம்புலன்சில் உங்கள் அப்பா மாதிரி, என் அம்மா மாதிரி பல பேர் ஹார்ட் அட்டாக்கில் போய்க் கொண்டிருப்பார்கள். பல சமயங்களில் ஆளே இல்லாமல், தேவையில்லாமல் பல ஆம்புலன்ஸ்கள் கூட்டத்திற்கு இடையே கடந்து செல்லும். அது வேறு விதமான அரசியல்” என அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பேசியிருந்ததும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருந்தது. தற்போது அதையும் இப்போது சமூக வலைதளப் பயனர்கள் ஒப்பிட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர்.