தமிழ்நாடு சட்டபேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதிமுக - பாஜக உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டம் நேற்று மாலை மதுரையில் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அதேசமயம், இந்தக் கூட்டத்தில் என்.டி.ஏ கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
திமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு குறித்தான பேச்சுவார்த்தை தொடங்கி நடந்து வரும் நிலையில், அதிமுக கூட்டணியில் இன்னும் தொகுதிப்பங்கீடு குறித்தான பேச்சு வார்த்தை தொடங்கவில்லை. இந்த சூழலில் தான், நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றிருக்கிறது.
மதுரையில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்தக் கூட்டத்தில், பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், ஐஜேகே நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், மதுரைப் பொதுக்கூட்டத்தைத் தொடர்ந்து, மார்ச் 11-ல் திருச்சியில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ள என்.டி.ஏ கூட்டணியின் பொதுக்கூட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.
அதேசமயம், இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட கூட்டணி கட்சித் தலைவர்கள், திமுக கூட்டணியை சுட்டிக்காட்டி என்.டி.ஏ. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்காதது ஏன்? எனவும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்தால் தேர்தல் பரப்புரையை தீவிரப்படுத்தலாம், எந்த சின்னத்தில் போட்டியிடுவது உள்ளிட்டவைகளை இறுதி செய்யலாம் எனவும் அதிமுக பொதுச்செயலாளர் கே. பழனிசாமியிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தொடர்ந்து, தொகுதிப் பங்கீட்டிற்கான குழுவை விரைவில் அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது.
இந்தச் சூழலில் தான், அதிமுக-வின் மாவட்ட செயலாளர் கூட்டம் மார்ச்- 4 ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில், இந்தக் கூட்டத்திற்கு பிறகு தொகுதிப் பங்கீட்டிற்கான குழுவை அதிமுக அமைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தசூழலில் தற்போது எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு பயணம் செய்திருப்பது தொகுதிப் பங்கீட்டு குறித்த சிக்கலை முடிவுக்கு கொண்டுவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.