கூட்டணிக்குள்ளேயே தெளிவில்லை.. திடீரென டெல்லி பயணித்த EPS.. என்ன காரணம்..?
அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படாததால், கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிருப்தியில் உள்ளன. இதனால் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் மேற்கொண்டு மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கிறார்.
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான கூட்டணியில், பாஜக, பாமக, அமமுக, தமாகா, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ஆனால், அதிமுக கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கப்படவே இல்லை. அதற்கான குழுவையும் அதிமுக தலைமை இன்னும் அமைக்கவில்லை. இதனால், கூட்டணி கட்சி தலைவர்கள், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருப்பதாக பேசப்படுகிறது. அதிமுக கூட்டணியில், கடந்த முறை 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, இந்த முறை 30 தொகுதிகளுக்கு மேல் கேட்டு வருவதாகக்க கூறப்படுகிறது. இதேபோல், கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக உள்ளிட்ட கட்சிகளும் கூடுதல் தொகுதிகளை கேட்டு வருகிறது.
ஏன் டெல்லி பயணம்..?
இந்நிலையில், மதுரையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் எடப்பாடி பழனிசாமி நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. அதனால், மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பதற்காக எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது. அப்போது தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் சுமூகத் தீர்வு ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதேபோல், திமுக முக்கிய புள்ளிகள் மீதான ஊழல் குற்றசாட்டு விசாரணை தொடர்பாகவும் பேசவுள்ளதாகத் தெரிகிறது.
ஏற்கனவே, கடந்த ஜனவரி 4-ந் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருச்சி வந்தபோது, அவரை சந்தித்து பேசுவதை எடப்பாடி பழனிசாமி தவிர்த்ததாகக் கூறப்பட்டது. ஆனால், டெல்லி திரும்பிய பிறகு, அங்கு சென்று அமித் ஷாவை சந்தித்து பேசினார். அதுபோல், இந்த முறையும் பிரதமர் நரேந்திரமோடி வந்து சென்றிருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி அவசர அவசரமாக டெல்லி செல்வது, அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

