திமுக - அதிமுக, ஸ்டாலின் - எடப்பாடி கே.பழனிசாமி web
தமிழ்நாடு

’ஸ்டாலின் vs சந்தானகிருஷ்ணன்.. உதய் vs ஆதிராஜாராம்..’ இறுதி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட அதிமுக!

2026 சட்டமன்ற தேர்தலுக்கான இறுதி வேட்பாளர்களை பட்டியலை வெளியிட்டுள்ளது எதிர்க்கட்சியான அதிமுக.

Rishan Vengai

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக தனது இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, மொத்தம் 167 தொகுதிகளில் தனித்து நிற்கும் திட்டத்தை உறுதிப்படுத்தியுள்ளது. கூட்டணிக் கட்சிகளுக்கு ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், இன்று வெளியான 17 பேர் பட்டியலில் கொளத்தூரில் ஸ்டாலினுக்கு எதிராக பி.சந்தானகிருஷ்ணன், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் உதயநிதிக்கு எதிராக ஆதி ராஜாராம் போட்டியிடுவது முக்கிய அம்சமாகும்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. அதிமுக, திமுக, நாம் தமிழர், தவெக, சசிகலா - ராமதாஸ் என ஐந்துமுனைப் போட்டி நிலவுகிறது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக்கட்சி, புரட்சி பாரதம் உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் பாஜகவுக்கு - 27 தொகுதிகளும், பாமகவுக்கு - 18 தொகுதிகளும், அமமுகவுக்கு - 11 தொகுதிகளும், த.மா.காவுக்கு 5 இடங்களும், இந்திய ஜனநாயகக் கட்சி மற்றும் புதிய நீதிக்கட்சிக்கு தலா 2 இடங்களும், ஜான் பாண்டியன் கட்சி மற்றும் புரட்சி பாரதம் கட்சிக்கு தலா 1 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதிமுக பொதுக்குழு கூட்டம்

மொத்தம் 167 தொகுதிகளில் தனித்து போட்டியிடும் அதிமுக அவர்களுடைய வேட்பாளர் பட்டியலை முதற்கட்டமாக 23 பேர், இரண்டாம் கட்டமாக 127 பேர் என வெளியிட்டது. அந்தவகையில் இன்று 17 பேருக்கான இறுதிகட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.

திமுக, அதிமுக நேரடி மோதல்..

சென்னை சுற்றியுள்ள ஸ்டார் தொகுதிகளுக்கான முக்கிய வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் திமுகவின் முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதிக்கு எதிராக போட்டியிடும் வேட்பாளர் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் பி.சந்தான கிருஷ்ணன் போட்டியிடுகிறார். அதேபோல துணை முதல்வர் உதயநிதி போட்டியிடும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் ஆதி ராஜாராம் போட்டியிடுகிறார். அதேபோல அமைச்சர் சேகர்பாபு போட்டியிடும் துறைமுகம் தொகுதியில் ராயபுரம் ஆர்.மனோ போட்டியிடுகிறார்.

வெளியிடப்பட்டியிருக்கும் பட்டியலின் படி,

1. ஆயிரம் விளக்கு - பா. வளர்மதி

2. அண்ணாநகர் - எஸ். கோகுல இந்திரா

3. சேப்பாக்கம் திருவல்லிக்கேணி - ஆதி ராஜாராம்

4. திட்டக்குடி (தனி) - என். முருகுமாறன்

5. துறைமுகம் - ராயபுரம் ஆர்.மனோ

6. விருகம்பாக்கம் - விருகை வி.என்.ரவி

7. தியாகராய நகர் - பி.சத்திய நாராயணன்

8. வேளச்சேரி - எம்.ஏக்.அசோக்

9. சோழிங்கநல்லூர் - கே.பி.கந்தன்

10. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் - ஆர்.எஸ். ராஜேஷ்

11. வில்லிவாக்கம் - எஸ்.ஆர்.விஜயகுமார்

12. திருச்சுழி - எம்.எஸ்.ஆர். ராஜவர்மன்

13. ஆலந்தூர் - எஸ். சரவணன்

14. கொளத்தூர் - பி. சந்தானகிருஷ்ணன்

15. திரு.வி.க. நகர் (தனி) - ஏ.பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்

16. எழும்பூர் (தனி) - அபிஷேக் ரங்கசாமி

17. ஆலங்குடி - தன.விமல்