எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி fb
தமிழ்நாடு

”முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வாழ்த்துகள்; அமித்ஷா பேசியது அவரது கருத்து” - இபிஎஸ் பேட்டி

மக்கள் விரோத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனை எல்லாம் மறைப்பதற்காக, மடைமாற்றம் செய்வதற்காக கேலிச்சித்திரங்கள் வெளியிடுகிறார்கள் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

சென்னையிலிருந்து விமானம் மூலமாக கோவை வந்தடைந்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அதில் பேசிய அவர், மக்கள் விரோத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனை எல்லாம் மறைப்பதற்காக, மடைமாற்றம் செய்வதற்காக கேலிச்சித்திரங்கள் வெளியிடுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

கீழடி குறித்து..

கீழடி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ”முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டிய ராஜன் கீழடி அகழ்வாய்வு குறித்து தெளிவான விளக்கம் கொடுத்துவிட்டார். அம்மா இருந்தபோது என்னென்ன நடவடிக்கைகள் எடுத்தோம். அவரது மறைவுக்கு பிறகு கீழடி ஆராய்ச்சி எப்படி நடத்தப்பட்டது என்பது குறித்து தெளிவான விளக்கம் கொடுத்து விட்டோம்.”

முருக பக்தர்கள் மாநாடு குறித்து..

முருக பக்தர்கள் மாநாடு குறித்து அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, “ அவரவர் விரும்பும் தெய்வங்களை வழிபடுவது அவரவர் விருப்பம். அது ஜனநாயகத்தின் உரிமை முருக பக்தர்கள் மாநாட்டை மதுரையில் நடத்துகிறார்கள். மாநாட்டிற்கு வாழ்த்துக்கள்.” என்றார்.

அமித்ஷாவின் ஆங்கில மொழி குறித்த பேச்சு

ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படும் நாள் வரும் என்று உள்துறை அமித்ஷா பேசியிருந்தநிலையில், அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி. அது அவரது தனிப்பட்ட கருத்து. தாய் மொழி முக்கியம் என்று அவர் கூறியிருக்கிறார்.

ஆனால், தற்போது தாய்மொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்கிற பொருளில்தான் அவர் பேசியிருக்கிறார்.” என்றார்.

மேலும், பேசிய அவர், ” திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொருத்தவரைக்கும் மக்களிடத்தில் மிகப்பெரிய கொந்தளிப்பு இருக்கிறது. மக்கள் விரோத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனை எல்லாம் மறைப்பதற்காக, மடைமாற்றம் செய்வதற்காக கேலிச்சித்திரங்கள் வெளியிடுவது, அவதூறுகளை பரப்பி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். கேலி சித்திரங்களுக்கு 2026 இல் தக்க தண்டனை மக்கள் வழங்குவார்கள். யோகா என்பது உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமானது. அதனை பிரதமர் முன்னெடுத்து நடத்தி வருகிறார் அதற்கு வாழ்த்துகள்.” என்று தெரிவித்துள்ளார்.