aiadmk candidates PT
தமிழ்நாடு

இடைத்தேர்தல் | தவெகவுக்குப் போட்டி.. களமிறக்கப்பட்ட அதிமுக வேட்பாளர்கள்!

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக, தவெகவைத் தொடர்ந்து அதிமுகவும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

Prakash J

2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட அதிமுக, வெறும் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதால் 3-ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால், சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, முக்கிய நிர்வாகிகள் பலர் கட்சியில் இருந்து வெளியேறினர். குறிப்பாக, மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம், அம்பாசமுத்திரம், கரூர் மற்றும் விராலிமலை அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர். இதையடுத்து, அத்தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து திருச்சி கிழக்குடன் சேர்த்து 7 தொகுதிகளுக்கு விரைவில், தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தவிர்த்த மற்ற 5 தொகுதிகளில் தேர்தல் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது.

இந்தச்சூழலில்தான், தமிழ்நாட்டில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன்படி, இந்த இரு தொகுதிகளிலும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து, அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலை முன்னிட்டு, திமுக, தவெக ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. திமுக சார்பில், மதுராந்தகம் (தனி) தொகுதியில், வழக்கறிஞர் ஐ.பரந்தாமனும், தாராபுரம் (தனி) தொகுதியில் வழக்கறிஞர் எஸ். சுகன்யாவும் நிறுத்தப்பட்டுள்ளனர். தவெக சார்பில், மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலும் தாராபுரம் தொகுதியில் சத்தியபாமாவும் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் கடந்த தேர்தலில் அதே தொகுதிகளில் அதிமுகவிலிருந்து வெற்றி பெற்றவர்களாவர். அதேபோல், அதிமுகவும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மதுராந்தகம் தொகுதியில் கணிதா சம்பத்தும், தாராபுரம் தொகுதியில் பானுமதியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.