ஓபிஎஸ்., இன்பதுரை
ஓபிஎஸ்., இன்பதுரை ட்விட்டர்
தமிழ்நாடு

“ஓபிஎஸ்ஸின் நோக்கம் அதுதான்” - அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை

PT WEB

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அக்கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்தி வருவதை எதிர்த்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த தனி நீதிபதி, ‘ஓபிஎஸ் அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் போன்ற அனைத்தையும் பயன்படுத்த தடை’ விதித்து உத்தரவிட்டார். இவ்வழக்கில் தனி நீதிபதி அளித்த தீர்ப்பினை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு செய்தார்.

இவ்வழக்கு ஏற்கெனவே நவம்பர் 16 ஆம் தேதி விசாரிக்கப்பட்டு, தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், “அதிமுக பெயர், கொடி, சின்னத்தினை ஓபிஎஸ் பயன்படுத்த தனி நீதிபதி விதித்த தடை தொடரும்” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

இதுகுறித்து அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை, ”அதிமுக என்பது எடப்பாடியார் தலைமையில் இயங்குகிறது. அதிமுக சட்டத்திட்ட விதிகள் திருத்தப்படி, பொதுச் செயலாளர் தலைமையில் ஒற்றை தலைமை இயங்கும் என தேர்வாணையம் அங்கீகரித்த பின்பு அந்தக் கொடியையும் சின்னத்தையும் லெட்டர்பேடையும் பயன்படுத்துவது தவறு. அவ்வாறு பயன்படுத்துவது தவறு என்றுதான் இந்த வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவு சரி என தெரிவித்துள்ளது.

மேலும் ‘இதில் உங்களுக்கு உரிமை இருந்தால் ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் சொன்னபடி, அதை சிவில் கோர்ட்டில்தான் தீர்க்க வேண்டுமே தவிர, இப்படி செய்யக் கூடாது’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது நீதிமன்றம். மக்கள் பிரதிநிதிச் சட்டம் 29A படி தேர்வாணையம்தான் கட்சி யார் கையில் இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கும். ஒபிஎஸ்ஸின் நோக்கம் அதிமுக நல்லா இருக்கக்கூடாது என்பதே. அதற்காக அவர் பல விஷயங்கள் செய்துகொண்டு இருக்கிறார். அதில் ஒன்று இந்த கொடியையும் சின்னத்தையும் பயன்படுத்துவது” எனத் தெரிவித்தார்.