தந்தையின் கொலைக்கு பழிக்குப் பழி வாங்க, 17 ஆண்டுகளாக காத்திருந்து அதிமுக பிரமுகரை பழி தீர்த்த கல்லூரி மாணவர் . சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம். நடந்தது என்ன? விரிவாக பார்க்கலாம்.
சென்னை டிபிசத்திரம் ஜோதி அம்மாள் நகர் முதல் தெரு பகுதியில் வசித்து வருபவர் ராஜ்குமார் (எ) புல்கான் (42). வயதான இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். டிபிசத்திரம் காவல் நிலைய B கேட்டகிரி ரவுடியாக இருந்தவர் திருந்தி வாழ்ந்ததாக கூறப்படும் நிலையில், பந்தல் அமைக்கும் கடையையும், கட்டிட கான்ட்ராக்டராகவும் வேலைகளை செய்து வந்துள்ளார். மேலும், அப்பகுதியில் அதிமுக பிரமுகராகவும் வலம் வந்தார். இவரது தாயார் விஜயா அதிமுக 100 வட்ட பிரதிநிதியாக உள்ளார்.
இந்த நிலையில், நேற்று வீட்டின் வெளியே தனது இருசக்கர வாகனத்தில் அமர்ந்து இருந்தவரை இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த கும்பல் கொலை செய்வதற்காக கையில் கத்தியோடு விரட்டியுள்ளது. ஜோதி அம்மாள் முதல் தெருவில் இருந்து மூன்றாவது தெரு வரைக்கும் விரட்டியதாக கூறப்படுகிறது.
உயிர் தப்ப, வின்சென்ட் என்பவர் வீட்டிற்குள் ராஜ்குமார் புகுந்தும், அவரை விடாத அந்த கும்பல், வின்சென்ட் மற்றும் அவரது மனைவி, 2 குழந்தைகள் முன்னிலையிலேயே ராஜ்குமாரை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடியது.
இதனையடுத்து, டி.பி சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில், அனுப்பி வைத்தனர். விசாரணையில் ராஜ்குமார் டி.பி சத்திரம் காவல்நிலையத்தில் பி கேட்டகிரி ரவுடியாக இருந்தவர் என்பதும் இவர் மீது 9 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
கடந்த 5 வருடங்களுக்கு மேலாக எவ்வித குற்றச்செயல்களிலும் ஈடுபடாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த கொலை வழக்கு தொடர்பாக டி.பி சத்திரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் யுவனேஷ் (19), 17 வயது சிறுவன், முகப்பேர் பகுதியைச் சேர்ந்த சாய்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். கைதான யுவனேஷ் மீது டிபி சத்திரம் காவல் நிலையத்தில் 2 வழக்குகள் இருப்பதும், 17வயது சிறுவன் மீது 4 வழக்குகள் இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
போலீசாரின் தொடர் விசாரணையில் கடந்த 2008 ஆம் ஆண்டு கல்லூரி மாணவர் யுவனேஷின் தந்தை செந்தில் குமாரை ரவுடி ராஜ்குமார் என்ற புல்கான் கொலை செய்துள்ளார். அதற்கு பழிவாங்குவதற்காக யுவனேஷ் தனது நண்பர்கள் மற்றும் ரவுடி கும்பலுடன் சேர்ந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு தந்தையை கொன்ற ராஜ்குமாரை கொலை செய்து தனது பழியை தீர்த்து கொண்டது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து கைதான 3 நபர்களிடமும் போலீசார் கிடுக்கிப்பிடி கிசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள டிபி சத்திரத்தைச் சேர்ந்த ரவுடிகள் இஸ்ரவேல், அஜித் மற்றும் அமைந்தகரையைச் சேர்ந்த கவுதம், அயனாவரத்தைச் சேர்ந்த ரவுடி பேட்ட அர்ஜூன், வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ரேசர் கணேசன், சூர்யா ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கும்பலை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.