தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் தமிழினத்துக்குத் தந்த நெருப்பு - முதலமைச்சர் ஸ்டாலின்!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அண்ணாசாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அவரை தொடர்ந்து அமைச்சர்களும் கலைஞர் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர். இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலைஞர் கருணாநிதி நினைவிடம் வரை அமைதி பேரணி தொடங்கி நடைபெற்றது. ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடம் நோக்கி அமைதி பேரணியில் தி.மு.க. எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், ஆயிரக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள் பங்கேற்றனர். இதையடுத்து மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மலர்தூவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
அண்ணா நினைவிடத்தை தொடர்ந்து கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
முன்னதாக இது தொடர்பாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் ,
“ தலைவர் கலைஞர் - முத்துவேலரும் அஞ்சுகம் அம்மையாரும் பூமிக்குத் தந்த பிறப்பு! தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் தமிழினத்துக்குத் தந்த நெருப்பு! அவரது சாதனைகளால் சிறப்பு பெற்ற தமிழ்நாட்டைக் காத்திட – முன்னேற்றிட உறுதியேற்று, கலைஞரின் ஒளியில் “எல்லார்க்கும் எல்லாம்” – “எதிலும் தமிழ்நாடு முதலிடம்” எனும் இலக்கை நோக்கி வெற்றிப்பாதையில் நடைபோடுவோம்!” என்று பதிவிட்டுள்ளார்.