செய்தியாளர்: சந்தான குமார்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து எம்.ஜி.ஆர் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார். ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி அதிமுக சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, செங்கோட்டையன், ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் ஸ்ரீனிவாசன், வேலுமணி, வளர்மதி, ஓ.எஸ்.மணியன், செல்லூர் ராஜூ, செம்மலை, எம்.சி.சம்பத், தமிழ் மகன் உசேன் உள்ளிட்ட பலரும் இடன் இருந்தனர்.
பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கலைத்துறை, அரசியல் என பன்முகத்தன்மை கொண்டவர் ஜெயலலிதா. முதலமைச்சராக இருக்கும் போது ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தவர். 8 ஆம் ஆண்டு நினைவு தினத்தில் தமிழகமே அழுதுகொண்டு இருக்கிறது. ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் புகழை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது” எனத் தெரிவித்தார்.
திருவண்ணாமலையில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட பாலம் இடிந்தது குறித்து அமைச்சர் எ.வ.வேலு அறிக்கை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “எ.வ.வேலு அறிக்கை முகம் சுழிக்கும் அறிக்கை. எங்கள் ஆட்சியில் 3 மாதத்திலா பாலம் இடிந்து விழுந்தது? வடிவேலு கிணற்றை காணவில்லை என்பது போல.. பாலம் இருந்த சுவடே இப்போது தெரியவில்லை. ஊழல் கரைபுரண்டு ஓடுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் எங்கள் ஆட்சியில் கட்டிய 20 பாலங்களை மனப்பாடம் செய்துகொண்டு பேசுகிறார். சினிமாவில் நடித்த அனுபவம் உள்ளதால் வசனத்தை மனப்பாடம் செய்துகொண்டு வந்துவிட்டார்.
திமுக ஆட்சியில் கட்டப்பட்ட மேம்பாலத்தில் நடந்த ஊழல் குறித்து பீட்டர் அல்போன்ஸ் ஒரு புத்தகத்தையே வெளியிட்டார். திமுக ஆட்சியில் மேம்பாலங்கள் கட்டுவதில் விஞ்ஞான ஊழல் நடைபெற்றதற்கு சாட்சியாக அந்த புத்தகம் உள்ளது.
கேட்ட கேள்விக்கு பதில் சொல்வதை விட்டுவிட்டு பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால்.. கொட்டை பாக்கு என்கிறார். எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டுக்கு பொறுப்பாக பதில் சொல்ல வேண்டும். ஆனால் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் எல்லாம் பொறுப்பில்லாமல் பதில் சொல்வது தலைகணத்தின் உச்சம். ஆணவம், திமிரின் உச்சம். அனைத்துக்கும் முடிவு கட்டும் நாள் 2026 தேர்தல்.
சாத்தனூர் அணையை முன் அறிவிப்பு இல்லாமல் திறந்துள்ளனர். இதை திமுக அரசின் நிர்வாக தோல்வி. மக்கள் பசியும் பட்டினியுமாக இருக்கிறார்கள். பொன்முடி மீது மக்கள் ஆக்ரோஷமாக சேற்றை வாரி இறைத்துள்ளார்கள். திராவிட மாடல் ஆட்சி மீது மக்கள் கடும் கோபத்தில் இருப்பதற்கு இதை விட சான்று வேறு கிடையாது. ஒவ்வொரு கிராமங்களிலும் எதிர்ப்புகள் உள்ளது. 2026 தேர்தலில் இவர்கள் தேர்தலுக்கு வாக்குகள் கேட்க போகமுடியாது. இடியமினை விட மோசமான சர்வாதிகார ஆட்சி நடக்கிறது.
மக்களுக்கு நிவாரண தொகையை உயர்த்திக் கொடுக்க வேண்டும். அதில் பாரபட்சம் இருக்கக் கூடாது. அவர்கள் வீடுகள், வாழ்வாதாரம் என அனைத்தையும் இழந்து இருக்கிறார்கள். மக்களுக்கு நிவாரணத் தொகையை உயர்த்திக் கொடுக்க பணம் இருக்காது. ஆனால் கருணாநிதியின் நினைவிடத்தை அமைப்பதற்கு, பேனா சிலை அமைப்பதற்கு, ஊர் ஊராக சிலை வைக்க மட்டும் பணம் இருக்கும். டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது. பால், மின் கட்டணம், சொத்துவரி என அனைத்தையும் உயர்த்தி அரசின் கருவூலத்தை நிரப்பி ஒரு குடும்பத்திற்கு மட்டும்தான் எல்லாம் செல்கிறது. திமுகவை 2026-ல் தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டார்கள்.
மத்திய அரசிடம் பணத்தை கேட்டு வாங்கவும் முடியவில்லை. ஏற்கனவே இருக்கும் பணத்தை செலவு செய்யவும் முடியவில்லை. அறிவில்லாத அரசாங்கத்தின் கீழ் மக்கள் இருப்பதால்தான் இவ்வளவு சிரமம். பழைய வீடுகளை இடித்துள்ள நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியம் புதிய வீடுகளையும் கட்டவில்லை.. மக்கள் இரண்டு மூன்று வருடங்கள் வெளியே வாடகை கொடுத்து வாழ்ந்து வருகிறார்கள். ஸ்ரீனிவாசபுரத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதற்கு திமுக அரசுதான் முழு காரணம்” எனத் தெரிவித்தார்.