பாஜக - தேமுதிக கூட்டணிக்கு அச்சாரமா fb
தமிழ்நாடு

பாஜக - தேமுதிக கூட்டணிக்கு அச்சாரமா? பிரேமலதா விஜயகாந்த் பேசிய காணொளியை பகிர்ந்த பிரதமர் மோடி!

சமூக வலைதளங்களில் பிரேமலதா பகிர்ந்துள்ள காணொளியில், பிரதமர் மோடியை பாராட்டி பேசியுள்ளார்.

PT WEB

அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகி இருக்கும் சூழலில், பிரதமர் மோடிக்கும், மறைந்த விஜயகாந்திற்கும் இடையே நல்ல நட்புறவு இருந்ததாகவும், அவர் சகோதரர் போன்றவர் எனவும் பிரேமலதா விஜயகாந்த் பேசியிருப்பது தமிழக அரசியலில் கவனம் ஈர்த்துள்ளது.

மோடி ஸ்டோரி என்ற சமூக வலைதள சேனலுக்கு பேட்டியளித்துள்ள தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பிரதமர் மோடி - விஜயகாந்த் இடையேயான நினைவலைகளை பகிர்ந்துகொண்டார். சமூக வலைதளங்களில் அவர் பகிர்ந்துள்ள காணொளியில், பிரதமர் மோடியை பாராட்டி பேசியுள்ளார்.

பிரதமர் மோடிக்கும், விஜயகாந்திற்கும் இடையே இருந்த உறவு, அரசியலைத் தாண்டிய ஒன்று என்றும். தமிழகத்தின் சிங்கம் என விஜயகாந்தை பிரதமர் மோடி அன்போடு அழைப்பார் எனவும், அவர் உடல்நலக் குறைவால் இருந்தபோது கவலைப்பட்டு, அடிக்கடி தொடர்புகொள்வார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி ஒரு சகோதரைப் போல தன்னுடன் பழகியதை வாழ்நாளில் மறைக்க மாட்டேன் எனவும் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். கடந்த 2024 மக்களவைத் தேர்தலின் போது, அதிமுக கூட்டணியில் தேமுதிக அங்கம் வகித்தது. தற்போது 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. எனினும் தேமுதிக எந்த கூட்டணியிலும் இல்லை என்றும், கட்சியின் மூத்தத் தலைவர்களுடன் சேர்ந்து கலந்தாலோசித்து கூட்டணி முடிவு எடுக்கப்படுமென பிரேமலதா சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார்.

ஏற்கெனவே மாநிலங்களவை உறுப்பினர் பதவி தொடர்பாக அதிமுகவுடன் தேமுதிகவிற்கு மனக்கசப்பு இருப்பதாக கூறப்படும் சூழலில், 2026 சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு பாஜகவுடன் நேரடியாக கூட்டணி அமைக்க பிரதமர் மோடியை புகழ்ந்து பிரேமலதா பேசியிருக்கிறாரா என்று கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், விஜயகாந்த் மற்றும் பிரதமருக்கு இடையேயான உறவு குறித்து பிரேமலதா விஜயகாந்த் பேசிய காணொளியை பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறிப்பிடத்தக்க தனது அன்பு நண்பர் என பதிவிட்டுள்ள மோடி, தானும் அவரும் பல ஆண்டுகள் ஒன்றாக பணி செய்ததாக குறிப்பிட்டுள்ளார். விஜயகாந்தின் சேவையை எதிர்வரும் தலைமுறை மறவாது எனவும் மோடி கூறியுள்ளார்.