varshini venkat  varshini venkat insta / hotstar
தமிழ்நாடு

26 வயது இளைஞரை மிரட்டி ரூ.5 லட்சம் பணம் பறிப்பு.. பிக்பாஸ் பிரபலம் வர்ஷிணி கைது!

சென்னையில் பிரபல தனியார் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த இளைஞரிடம் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் மிரட்டி பணம் பறித்ததாக நடிகை உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

PT WEB

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான வர்ஷிணி வெங்கட், குறும்பட முதலீடு செய்யும்படி கூறி 26 வயது இளைஞரை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கிண்டியில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த 26 வயது இளைஞர் கொடுத்த புகாரின் அடிப்படையில், கிண்டி போலீசார் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமானவர் குறும்படம் எடுப்பதற்காக முதலீடு செய்யுங்கள் எனக் கூறி தன்னை ஏமாற்றியதாக புகார்தாரர் தெரிவித்துள்ளார்.

பணத்தை கேட்டப்பொழுது கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி, பேச அழைத்து தன்னை தாக்கி, இரண்டு செல்போன்கள் மற்றும் 50 ஆயிரம் ரூபாயை பறித்ததாகவும், அதன் பின்னர் தொலைபேசியில் மிரட்டி வங்கி பரிவர்த்தனை மூலம் 5 லட்சம் ரூபாய் பறித்ததாகவும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 27 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டுவதாகவும், பணம் தராவிட்டால் பொய் வழக்கு போடுவோம் என மிரட்டுவதாகவும் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் வர்ஷினி வெங்கட், சஞ்சய் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கிண்டி போலீசார் வர்ஷிணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் தவெக கட்சியை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது