actress vaishali  instagram
தமிழ்நாடு

“200 யூனிட் இலவசமே வேண்டாம்!” நடிகையின் வைரல் வீடியோ EB-யின் அதிரடி பதில்!

நீங்கள் சொன்ன 200 யூனிட் இலவச மின்சாரத்தை ரத்து செய்துவிட்டு, ஏற்கனவே இருந்ததைப் போல கட்டணத்தை வழங்கினால்கூட நன்றாக இருக்கும்.

PT WEB

தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, பொதுமக்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என முதல்வர் விஜய் கையெழுத்திட்டிருதார். அப்போது சீரியல் நடிகை வைஷாலி சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், “பார்த்தீங்களே… அண்ணா தளபதியோட முதல் கையெழுத்தே 200 யூனிட் EB ஃப்ரீ. இப்போ என்ன பேசுவீங்க? இனிமேல் உங்கள் வீட்டில் EB பிரச்சினையே இருக்காது. இது வெறும் ஸ்டார்டிங் தான். இனி எல்லாமே அதிரடியாக இருக்கும். தமிழ்நாடே அப்படி மாறப்போகிறது” என பேசியிருந்தார்.

TANGEDGO Reply

இந்த வீடியோ அப்போது பெரிய அளவில் வைரலாகவில்லை. ஆனால், தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மின்வெட்டு மற்றும் மின்சாரக் கட்டணம் அதிகரித்துள்ளதாக பொதுமக்களிடையே புகார்கள் எழுந்துள்ள நிலையில், வைஷாலி பேசிய பழைய வீடியோவை நெட்டிசன்கள் மீண்டும் பகிரத் தொடங்கினர். மேலும், “இதுதான் உங்க அண்ணனோட மாற்றமா?” என்ற விமர்சனத்துடன், வைஷாலி வெளிச்சத்தில் பேசிய வீடியோவை இருண்ட பின்னணியில் இருப்பது போன்று எடிட் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் இந்த விவகாரம் மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளது. இதையடுத்து, நடிகை வைஷாலி மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், தான் முன்பு பதிவிட்ட வீடியோ குறித்து மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தார்.

மேலும் அவர், “தவெக மின்சார விஷயத்தில் சொன்னபடி இதுவரை செயல்முறையில் எதுவும் நடக்கவில்லை. நீங்கள் சொன்ன 200 யூனிட் இலவச மின்சாரத்தை ரத்து செய்துவிட்டு, ஏற்கனவே இருந்ததைப் போல கட்டணத்தை வழங்கினால்கூட நன்றாக இருக்கும். இப்படியே போனால் அரசாங்கத்தின் மீது இருக்கும் நம்பிக்கை போய்விடும்” எனக் கூறியிருந்தார்.

இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், மின்வாரியம் இதற்கு பதிலளித்துள்ளது. மின்வாரியம் வெளியிட்டுள்ள பதிலில், “இந்தக் காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ள புகார் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்வதற்காக, மின்வாரியக் குழுவினர் சம்பந்தப்பட்ட நபரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் மற்றும் முழுமையான முகவரியை வழங்குமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் அவர் தருவதாக கூறி இணைப்பை துண்டித்துவிட்டார்.

actress vaishali

அதன் பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் பிரச்னையை கேட்டு தீர்க்க தயாராக உள்ளோம் என பதிலளித்திருக்கிறது. மேலும் உண்மை நிலவரத்தை அறியாமல், இந்த விவகாரம் தொடர்பாக வதந்திகளை பரப்ப வேண்டாம்” எனக் கேட்டுக்கொண்டுள்ளது.

இதற்கிடையே, மின்வாரியத்தின் பதிவின் கமெண்ட் செக்ஷனில் பலரும் தங்களுக்கு ஏப்ரல் மாதத்தில் வந்த மின்சாரக் கட்டணம் மற்றும் கடந்த இரண்டு மாதங்களில் 200 யூனிட் இலவச மின்சாரம் அறிவிக்கப்பட்ட பிறகு வந்துள்ள கட்டணம் ஆகியவற்றை ஒப்பிட்டு, அதற்கான ஸ்கிரீன்ஷாட்களையும் பதிவிட்டு வருகின்றனர். அவர்களிடம், “உங்கள் முழு விவரங்களை DM-ல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் புகார் மீது விரைவான நடவடிக்கை எடுக்கப்படும்” என மின்வாரியம் சார்பிலும் பதிலளிக்கப்பட்டு வருகிறது. இதனால், மின்சாரக் கட்டணம் தொடர்பான பிரச்சனை தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.

செய்தியாளர் - ராஜ்குமார்.ர