திருச்சியில் நடைபெற்ற இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநாட்டின் ஒரு பகுதியாக புத்தூர் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் திமுக எம்பி ஆ.ராசா கலந்துகொண்டார். அவர் பேசுகையில், “சாதி, மத, வர்க்க ரீதியாக பெரும்பான்மையினர் எந்த வடிவத்தில் ஆதிக்கம் செலுத்தினாலும் அதை எதிர்ப்பதுதான் பகுத்தறிவு கொள்கை. பகுத்தறிவு இல்லை என்றால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை, இந்திய தேசத்தை, மதச்சார்பின்மையை பாதுகாக்க முடியாது.
பகுத்தறிவாளர்களது எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டி உள்ளது. சாதி ஒழிய வேண்டும் என்பதை பகுத்தறிவு இருந்தால் மட்டும்தான் சொல்ல முடியும். அதனை சொல்லக் கூடிய தகுதி படைத்தவராக உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார்.
‘அம்பேத்கரை ஏற்றுக்கொள்வோம்; பெரியாரை ஏற்றுக் கொள்ள மாட்டோம்’ என்று சொல்கிறார்கள். அது ஒரு அரசியல். அதற்கு என்ன காரணம்? இந்து ராஜ்ஜியம் வந்தால், அதைவிட இந்த நாட்டிற்கு பெரிய அழிவேதும் இருக்க முடியாது. இந்து ராஜ்ஜியம் அமைவதை தடுத்து நிறுத்த வேண்டும் என அம்பேத்கர் சொல்லியிருக்கிறார். அதை ஏற்றுக்கொள்ள தயாரா? அம்பேத்கர் புத்த மதத்தை ஏற்றுக் கொண்டார். எனவே, ராமனின் 10 அவதாரங்களில் புத்தரும் ஒருவர் எனக் கூறி அம்பேத்கரையும் புத்தரையும் சுவிகரித்துக் கொண்டார்கள். எனவே, அம்பேத்கரை எங்க ஆளு என்கிறார்கள். நாங்கள் அம்பேத்கரை படித்திருக்கிறோம். அம்பேத்கர் எந்த காலத்திலும் உங்களோடு வர மாட்டார்.
இவ்வாறு பொட்டலம் கட்ட முடியாத நெருப்பாக ஈரோட்டு தந்தை பெரியார் இருக்கிறார். அத்தகைய நெருப்பை நாம் கையில் வைத்திருக்கிறோம். அது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் பரவி, மத்தியில் உள்ள நாசகர அரசை தூக்கி எறிய கூடிய பணியை நாம் மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.
நடிகர் சத்யராஜ் பேசுகையில், “பெரியாரை உலகமயமாக்குவோம், உலகை பெரியார் மயமாக்குவோம். பெரியார்மயமாக்குவோம் என்பது எல்லோரையும் புத்திசாலிகளாக்குவது தான். குழந்தைகள் நாத்திகராகத்தான் பிறக்கிறார்கள். அவர்கள் எந்த குடும்பத்தில் பிறக்கிறார்களோ அவர்களின் குடும்பத்தினர் அவர்கள் மத நம்பிக்கைகளை திணித்து குழந்தைகளை மதத்திற்குள் இருக்கமாக்கி விடுகிறார்கள்.
பெரியார் சுயமாக சிந்தித்து வந்தவர். கோவிலில் உண்டியல் வைப்பது ஆத்திகம். அதில் பூட்டு போடுவது நாத்திகம் என பெரியார் கூறியுள்ளார். வைக்கத்தில் பெரியார் போராட்டம் நடத்திய போது அங்கு சிலர் பெரியார் மரணிக்க வேண்டும் என யாகம் நடத்தினார்கள். ஆனால், அவ்வாறு நடத்தியதில் ஒருவர் இறந்தார், அதற்கு பெரியார் மகிழவில்லை.
நான் கடவுள் நம்பிக்கையில் தினமும் பல கோவில்களுக்கு சென்றுள்ளேன் அப்பொழுதெல்லாம் ஒரு விதமான மன அழுத்தம் இருந்தது. நான் நாத்திகனாக மாறிய பின்னர் எந்த பிரச்சனையும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கிறேன். தனி மனிதன் மகிழ்ச்சியாக இருப்பதற்கு தடையே மூட நம்பிக்கை தான். அதை தூக்கி எறிந்தால் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கலாம். தனி மனித மகிழ்ச்சிக்கும் சமூக மகிழ்ச்சிக்கும் பெரியாரின் பகுத்தறிவு சிந்தனை இருந்தால் போதும் என்றார்” என்றார்.