விஜய் - ரஞ்சித் pt
தமிழ்நாடு

“விஜய் ரொம்ப வேதனையில் இருப்பார்; வாழ்நாள் முழுவதும் அந்த துக்கம் இருக்கும்” - நடிகர் ரஞ்சித்

கரூர் சம்பவத்தால் விஜய் ரொம்ப வேதனையில் இருப்பார் என்று நடிகர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

Rishan Vengai

கரூர் சம்பவத்தால் விஜய் ரொம்ப வேதனையில் இருப்பார் என்று நடிகர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி இரவு தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையில், கூட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நெஞ்சைவிட்டு அகலாத இந்த துயரச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், தொடர்ந்து இந்த சம்பவம் பேசுபொருளாக இருந்துவருகிறது.

கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு தவெக தரப்பில் ரூ.20 லட்சமும், காயம் ஏற்பட்டவர்களுக்கு ரூ.2 லட்சமும் நிவாரணம் அறிவிக்கப்பட்ட போதும், தவெக தலைவர் விஜய் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவில்லை என்ற விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது.

இந்தசூழலில் கரூர் துயரச் சம்பவம் குறித்து பேசியிருக்கும் நடிகர் ரஞ்சித், விஜய் மிகவும் மனவேதனையில் இருப்பார் என்று பேசியுள்ளார்.

விஜய் ரொம்ப வேதனையில் இருப்பார்..

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசவாமி திருக்கோவிலில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பாக வேல் பூஜை மற்றும் கந்த சஷ்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் நடிகர் ரஞ்சித் வேல் பூஜையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.

நடிகர் ரஞ்சித்

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஞ்சித் கரூர் துயரச்சம்பவம் குறித்து தன்னுடைய கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “ஒருவரை ஒருவர் மாறி மாறி திட்டிக் கொள்வது தான் நடந்து வருகிறது. நடந்த சம்பவம் சாதாரண சம்பவம் கிடையாது. போனது 41 உயிர். நாம் தான் இதை விளக்கேற்றி எண்ணெய் நூற்றி திரிவைத்து தினந்தோறும் தூண்டி விட்டு வருகிறோம். இந்த சம்பவம் அரசியலாக மாறி விட்டது. சமூகவலைதளத்தை திறந்தாலோ ஒவ்வொரு கட்சியை சார்ந்தவர்கள் முட்டு கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் நான் அதை பார்க்கவில்லை, நான் பிள்ளையை பறிகொடுத்த தகப்பனின் நிலையில் இருந்துதான் யோசிக்கிறேன். இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பேசினார்.

நடிகர் ரஞ்சித்

தொடர்ந்து விஜய் குறித்து பேசிய அவர், ”விஜய் நிச்சயம் ரொம்ப வேதனையில் தான் இருப்பார். வாழ்நாள் முழுவதும் இந்த துக்கம் அவருக்கு இருந்து கொண்டு தான் இருக்கும். இது போல நிகழ்வு எந்த ஒரு தலைவனுக்கும் வரக்கூடாது. இது அவருடைய இறுதிகாலத்துவரைக்கும் சுமந்துகொண்டே தான் இருக்கும். பெற்றோர்களை இழந்தால் கூட மறந்து விடலாம். ஆனால் போன 41 உயிர்கள் என்பது அவருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய வடு, அதை அவரால் மறக்கவே முடியாது” என பேசினார்.