கஞ்சா கருப்பு புதியதலைமுறை
தமிழ்நாடு

“எந்த நடவடிக்கையும் வேண்டாம்; எதும் திருடு போகல” - முன்னுக்குப்பின் முரணாக பேசிய கஞ்சா கருப்பு!

நடிகர் கஞ்சா கருப்புக்கும் அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.

PT WEB

நடிகர் கஞ்சா கருப்புக்கும் அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த நடிகர் கஞ்சா கருப்பு சென்னை மதுரவாயல் கிருஷ்ணா நகர் பகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ரூபாய் 20 ஆயிரத்துக்கு ரமேஷ் என்பவரின் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். சென்னையில் சினிமா சூட்டிங் நடக்கும் போதெல்லாம் வாடகை வீட்டில் தங்குவார் என சொல்லப்படுகிறது.

நடிகர் கஞ்சா கருப்பு

இந்த நிலையில் கஞ்சா கருப்பு மீது வீட்டின் உரிமையாளர் ரமேஷ் மதுரவாயல் காவல் நிலையத்தில் ஆன்லைன் வாயிலாக புகார் ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில் கஞ்சா கருப்பு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் நேற்று முன் வைத்தார்.

இதற்கு எதிர்வினையாக கஞ்சா கருப்பு, “என்னிடத்தில் வீட்டின் சாவி இருக்கும் பொழுதே, எனது வீட்டில் இருந்த பொருட்களை வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது நண்பர்கள் திருடியுள்ளனர். முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மற்றும் தற்போதையை முதல்வர் ஸ்டாலின் கைகளால் வாங்கிய கலைமாமணி விருதை காணவில்லை. ரேஷன் கார்டு ஆதார் கார்டு பேங்க் புக் அனைத்தையும் திருடி சென்றிருக்கின்றனர்.” என வீட்டின் உரிமையாளருக்கு எதிராக பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை வைத்தார்.

மேலும், “நான் மிரட்டல் விடுத்ததாக வீட்டின் உரிமையாளார் கொடுத்த கொலை மிரட்டல் ஆடியோ சித்தரிக்கப்பட்டுள்ளது. நான் பணம் கொடுக்கவில்லை என உரிமையாளர் பொய் கூறுகிறார். ஆனால் வாடகையாக ரூபாய் 40,000 பணத்தை கடந்த மாதம் கொடுத்தேன். என்னிடம் ஆதாரம் உள்ளது” என்று கூறியிருந்தார்.

முன்னுக்குப்பின் முரணாக பேசிய கஞ்சா கருப்பு...

இந்தநிலையில், இருவரையும் மதுரவாயல் காவல் துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரித்தனர். அப்போது,
கஞ்சா கருப்புக்கும் ரமேஷூக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டது. இதனையடுத்து கஞ்சா கருப்பு, “மூன்று மாதத்தில் வீட்டை காலி செய்துவிடுகிறேன். வீட்டில் இருந்த எந்த பொருளும் திருடு போகவில்லை” என முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இருப்பினும் எந்த நடவடிக்கையும் வேண்டாம் என்றும் அவர் காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளார்.