”கலைமாமணி விருதை காணவில்லை.. வீட்டில் எல்லாமே திருட்டு போச்சு..” - கஞ்சா கருப்பு குற்றச்சாட்டு
”கலைமாமணி விருதை காணவில்லை” வாடகை வீட்டு உரிமையாளர் மீது கஞ்சா கருப்பு குற்றச்சாட்டு
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த நடிகர் கஞ்சா கருப்பு சென்னை மதுரவாயல் கிருஷ்ணா நகர் பகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ரூபாய் 20 ஆயிரத்துக்கு ரமேஷ் என்பவரின் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். சென்னையில் சினிமா சூட்டிங் நடக்கும் போதெல்லாம் வாடகை வீட்டில் தங்குவார்.
இந்த நிலையில் கஞ்சா கருப்பு மீது வீட்டின் உரிமையாளர் ரமேஷ் மதுரவாயல் காவல் நிலையத்தில் ஆன்லைன் வாயிலாக புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில் கஞ்சா கருப்பு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் நேற்று முன் வைத்தார்.
இந்த நிலையில் இன்று தனது வீட்டில் இருந்த பொருட்களை வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது நண்பர்கள் திருடியுள்ளதாக நடிகர் கஞ்சா கருப்பு பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். முன்னதாக, தான் வசிக்கும் வாடகை வீட்டின் கதவை போலீசார் மற்றும் செய்தியாளர்கள் முன்பு நடிகர் கஞ்சா கருப்பு திறந்து ஆய்வு செய்தார். அப்போது முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மற்றும் தற்போதையை முதல்வர் ஸ்டாலின் கைகளால் வாங்கிய கலை மாமணி விருதை காணவில்லை என அவரது குற்றச்சாட்டினை வீட்டின் உரிமையாளர் மீது வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "நான் மிரட்டல் விடுத்ததாக வீட்டின் உரிமையாளார் கொடுத்த கொலை மிரட்டல் ஆடியோ சித்தரிக்கப்பட்டுள்ளது. நான் பணம் கொடுக்கவில்லை என உரிமையாளர் பொய் கூறுகிறார். ஆனால் வாடகையாக ரூபாய் 40,000 பணத்தை கடந்த மாதம் கொடுத்தேன். என்னிடம் ஆதாரம் உள்ளது.
சாவி என்னிடம் இருக்கும் போது, வீட்டின் உரிமையாளர், அவரது நண்பர்களுடன் அத்துமீறி கதவை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கிறார். கலைஞர், ஸ்டாலின் கைகளில் கொடுத்த கலைமாமணி விருதை காணவில்லை. ரேஷன் கார்டு ஆதார் கார்டு பேங்க் புக் அனைத்தையும் திருடி சென்றிருக்கின்றனர். நான் வாடகை பணம் கொடுத்து விட்டேன். ஆனாலும் அத்துமீறி எனது வீட்டை உடைத்து அறைக்குள் புகுந்து உடைத்து உரிமையாளர் அடாவடி செய்துள்ளார்.
எந்த உரிமையாளராவது வாடகை கொடுத்த வீட்டின் கதவை உடைத்து திருட்டுத்தனம் செய்வார்களா? நான் குடும்பத்துடன் வசித்து வந்திருக்கிறேன் நான் ஒன்னும் விபச்சாரம் செய்யவில்லை. எனது பொருளை காணவில்லை என்றால் எனக்குதான் வலிக்கும். அதனால்தான் நான் கத்துகிறேன். சாவி என்னிடம் உள்ளபோது அத்துமீறி கதவை உடைத்து உரிமையாளர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
கொலை மிரட்டல் ஆடியோ சித்தரிக்கபட்டுள்ளது. என்னைப் போன்று யாரையோ ஒரு ஆளை வைத்து பேசி எடுக்கப்பட்டிருக்கிறது" என பரபரப்பு பேட்டி கொடுத்தார்.