சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டும் பதிவுகளை வெளியிடும் 36 கணக்குகளை சிவகங்கை காவல்துறை முடக்கியது. இனி சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சமூக வலைதளத்தில் சாதிய வன்மத்தையும், ரவுடிசத்தையும் புகழும் ரீல்ஸ்கள் இளைஞர்களை சீரழிக்கும் விதத்தில் மாறியிருப்பது கவலைக்குறியதாக மாறியிருக்கிறது. இதையடுத்து இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கத்தில் வன்முறையை தூண்டும் வகையில் பதிவிடும் நபர்களை குறிவைத்து நடவடிக்கையில் காவல்துறை இறங்கியுள்ளது.
சமீபத்தில் சிவகங்கையில் 26 வயதான சுள்ளான் மதன் என்ற நபர், படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு இன்ஸ்டாகிராம் மூலம் யார் பெரியவர் என இரு ரவுடி கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலும் ஒரு காரணமாக கூறப்பட்டது.
அதிலும் கொல்லப்பட்ட சுள்ளான் மதன் என்ற நபரின் ஆதரவாளர்கள் பல்வேறு சமூக வலைதள பக்கங்களை உருவாக்கி தங்கள் குழுவின் சமூக விரோத செயல்களை வீடியோவாக பதிவு செய்து எடிட் செய்து வெளியிட்டனர். அந்த வீடியோக்கள் லட்சக்கணக்கானோரை சென்றடைந்துள்ளது.
மேலும் மதனின் கொலையைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் பழிக்கு பழிவாங்குவோம் என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் குழுவாக ஒருங்கிணைந்து குற்றச்செயல்களில் இவர்கள் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இது போன்ற இன்ஸ்டாகிராம் கணக்குகளை முடக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
அதன் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் இருதரப்பினரிடையே மோதலைத் தூண்டும் வகையிலும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பதிவுகள் வெளியிட்ட 36 சமூக வலைதளக் கணக்குகள் முடக்கப்பட்டதாக சிவகங்கை காவல்துறை கூறியுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி கொலை மிரட்டல் விடுப்பது, வன்முறையைத் தூண்டும் கருத்துகளைப் பதிவிடுவது மற்றும் இருதரப்பினரிடையே பகையை உருவாக்கும் செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிகை விடுத்துள்ளார்.
அதே போல, சமூக வலைதளங்களில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களைக் காட்சிப்படுத்தி, அச்சுறுத்தல் மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையில் வீடியோக்கள் வெளியிடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை, திருச்சி மண்டல காவல்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே தென் மண்டல காவல்துறையின் கீழ் உள்ள 10 மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில், ஆபரேஷன் டிஜிட்டல் விஜில் என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் சமூக ஊடகப் பதிவுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தன. மேலும் Instagram, Facebook, YouTube, WhatsApp உள்ளிட்ட சமூக ஊடகத் தளங்களில் வெளியிடப்படும் சட்டவிரோத மற்றும் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பதிவுகளைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன்படி, 2026 ஜனவரி 1 முதல் அக்டோபர் 22ஆம் தேதி வரை மொத்தம் 342 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளனஎன்றும் , இந்த வழக்குகள் தொடர்பாக 193 பேர் கைது செய்யப்பட்டு, 519 சமூக ஊடகப் பதிவுகள் முடக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.