Homam being performed at a police station Pt
தமிழ்நாடு

காணாமல் போன 7 வயது சிறுமி : புகார் அளித்த காவல்நிலையத்தில் ஹோமம்? வெளியான வீடியோவால் சர்ச்சை!

7 வயது சிறுமி காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட காவல்நிலையத்தில் கணபதி ஹோமம் நடத்தப்பட்டதாக வெளியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Praveen Joshva L

விழுப்புரம் மாவட்டத்தில் 7 வயது சிறுமி காணாமல் போன வழக்கில், சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் ஹோமம் நடத்தப்பட்டதாக வெளியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி குறித்து எந்த தடயமும் கிடைக்காத நிலையில், சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி பகுதியில் வசித்துவந்த வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள் கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி காணாமல் போயுள்ளார். சிறுமியை பல இடங்களில் தேடிய குடும்பத்தினர் எங்கும் கிடைக்காததால் சத்தியமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

சிறுமியைத் தேட 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சிசிடிவி கேமரா, செல்போன் பதிவுகளை ஆய்வு செய்தும் சிறுமி காணாமல் போனது குறித்து எந்த தடையமும் கிடைக்கவில்லை. இதனிடையே கடந்த அக்டோபர் 21ஆம் தேதி இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்ட நிலையில் சிபிசிஐடி போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்றோடு சிறுமி காணாமல் போய் 41 நாட்கள் ஆன நிலையில், சிறுமி குறித்து எந்த தடயமும் கிடைக்காமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர். இதனிடையே சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் ஒரு மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டது. அதேபோல் விவசாய கிணற்றில் ஒருவர் அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். மேலும் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் விபத்தில் உயிரிழந்தார்.

சிறுமி காணாமல் போன வழக்கில் இருந்து தொடர்ச்சியாக சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக இறப்பு, சந்தேக மரணம் உள்ளிட்ட வழக்குகள் பதிவாகி வருகிறது என கூறப்படுகிறது. இதனால் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு ஏற்பாட்டில் காவல்நிலையத்தில் கணபதி ஹோமம் யாகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. மேலும் அது தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.