செம்பரம்பாக்கம் ஏரி pt desk
தமிழ்நாடு

சென்னையின் முக்கிய நீராதாரம்; சோழர்கள் கட்டிய செம்பரம்பாக்கம் ஏரி.. கடந்து வந்த வரலாறு!

சென்னையின் முக்கிய நீராதாரமாக விளங்கும், ஆயிரம் ஆண்டு பழமையான செம்பரம்பாக்கம் ஏரியின் வரலாறு குறித்து இங்கு பார்ப்போம்..

PT WEB

சென்னை மாநகருக்குத் தினமும் 265 மில்லியன் லிட்டர் தண்ணீரைக் குடிக்கக் கொடுத்துக்கொண்டிருந்த செம்பரம்பாக்கம் ஏரி, இனி நாள்தோறும் 530 மில்லியன் லிட்டர் குடிநீரை வாரி வழங்கவிருக்கிறது. இதன்மூலம் சென்னை பெருநகரம் மட்டுமின்றி, தாம்பரம், ஆவடி மாநகராட்சி பகுதி மக்களும் செம்பரம்பாக்கம் தண்ணீரைத் தடையின்றி நுகரவிருக்கிறார்கள். ஓர் அணைக்கட்டுக்கு இணையாக தண்ணீரைத் தேக்கிவைத்து ஆண்டு முழுக்க குடிநீர் தரும் செம்பரம்பாக்கத்தின் வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்!

ராஜேந்திர சோழன் கட்டிய ஏரி!

நீர்நிலைகளும், நீர்ப்பறவைகளும் சூழ்ந்த பசுமை நகரமாக ஒருகாலத்தில் சென்னை திகழ்ந்தது என்றால், நம்ப முடிகிறதா? ஆம். அப்படித்தான் இருந்தது. அம்பத்தூர், கொளத்தூர், பல்லாவரம், வேளச்சேரி, சேத்துப்பட்டு, அயனாவரம்… இப்படி பல இடங்கள் பெரும் நீர்நிலைகளைக் கொண்டிருந்தவை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீர்நிலைகள் சென்னையை அலங்கரித்தன. அவற்றுக்கெல்லாம் மணி மகுடமாக சோழர் காலத்தில் உருவாக்கப்பட்டதுதான் செம்பரம்பாக்கம் ஏரி!

ராஜேந்திர சோழன்

தமிழ்நாட்டை ஒருங்கிணைத்த பேரரசர் ராஜராஜனின் புதல்வர் ராஜேந்திரன் காலத்தில்தான் செம்பரம்பாக்கம் ஏரி உருவாக்கப்பட்டது. இன்று நாம் காணும் செம்பரம்பாக்கம் ஏரியானது, நகரமயமாக்கலின் விளைவாக நிறைய இழந்தது போக நமக்குக் கிடைத்திருக்கும் மிச்ச சொச்சம்தான் என்றாலும், நமக்கு காணக் கிடைக்கும் அளவிலேயேகூட சோழர்களின் பெரிய கொடை என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். குமரியில் பெரியகுளம் ஏரி; கோவையில் சிங்காநல்லூர் ஏரி; நாகையில் திருப்பூண்டி ஏரி; கடலூரில் வீராணம் ஏரி; தருமபுரியில் சோழவராயன் ஏரி என்று தமிழ்நாட்டின் நாற்திசைகளிலும் பெரும் நீர் கட்டுமானங்களை உருவாக்கி, வேளாண்மையிலும் பொருளாதாரத்திலும் பெரும் பாய்ச்சலை உருவாக்கிய சோழர்கள் இன்றைய சென்னைக்கு அப்படி உருவாக்கிக் கொடுத்துச் சென்ற பெரும் கொடை செம்பரம்பாக்கம்.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு வயது 1000!

ஒரு கோடியைத் தொட்டிருக்கும் சென்னை பெருநகர மக்களுடைய குடிநீர் தேவையை நிறைவேற்றுவதில், இன்றும் முதன்மையான நீர் கட்டுமானமாக செம்பரம்பாக்கம் ஏரியே திகழ்கிறது. பரப்பளவில் பெரியது வீராணம் என்றாலும்கூட, கொள்ளளவில் பெரியது செம்பரம்பாக்கம்; 3.64 டி.எம்.சி. தண்ணீரைத் தேக்கும் வல்லமை பெற்றது செம்பரம்பாக்கம். ராஜராஜன், ராஜேந்திரனுடைய காலகட்டம் என்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைக் குறிப்பதாகும். எனில், செம்பரம்பாக்கத்துக்கு வயது ஆயிரம் ஆகிறது!

செம்பரம்பாக்கம் ஏரி

நினைத்துப்பாருங்கள்…. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இத்தகைய ஒரு பரந்து விரிந்த நீர் கட்டுமானத்தை உருவாக்கியது எப்பேர்ப்பட்ட சாதனை! எத்தனை ஆயிரம் மனிதர்களின் பேருழைப்பின் விளைவு இது! அதைப் பேணி, பாதுகாக்கும் பொறுப்பையேனும் நாம் உணர்ந்திருக்கிறோமா; இந்த ஏரிதான் சென்னைக்கான மிக முக்கியமான நீராதாரம் என்பதை நம் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்கிறோமா; ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம்முடைய மூதாதையர்களால் உருவாக்கப்பட்டது எனும் சோழர்கள் வரலாற்றை கடத்தியிருக்கிறோமா? எத்தகு பசுமை நகரமான சென்னையை இன்று எத்தகைய வெம்மை நகரமாக மாற்றியிருக்கிறோம் என்ற கேள்வியையேனும் கேட்டுக்கொள்கிறோமா?

இத்தகு, அறிவுக் கடத்தல் நடக்கும்போதுதான் அடுத்தடுத்த தலைமுறைகள் தம்முடைய சொந்த ஊரை, பாரம்பரிய சொத்துகளைப் பாதுகாக்கும் பொறுப்புணர்வையும் இழந்தவற்றை மீட்டுருவாக்கும் கனவையும் பெறுவார்கள் என்கிறார்கள் வரலாற்றாய்வாளர்கள். செம்பரம்பாக்கத்தில் இந்த வரலாற்றை விரிவாகப் பேசும் தொல்லியல் கல்வெட்டுகளைப் பதிக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள்!