முழு கொள்ளளவை எட்டிய செம்பரம்பாக்கம் ஏரி: உபரி நீரை திறக்க உத்தரவு – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்
தொடர் கனமழை, நீர்வரத்து அதிகரிப்பால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்தது. செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவான 24 அடியில் 23.29 அடியை எட்டியதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியிலிருந்து உபரி நீர் திறக்க முடிவு செய்யப்பட்டது. ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் தற்போது 3453 மில்லியன் நீர் இருப்பு உள்ளது. அதே போல் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 6500 கன அடி நீர் வரத்து உள்ளது.
இதன் காரணமாக நீர்வளத் துறை அதிகாரிகள் பரிந்துரையின் படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீரை திறக்க உத்தரவிட்டார். அதன்படி முதல் கட்டமாக இன்று காலை 8 மணியளவில் 5 கண் மதகுகள் வழியாக ஆயிரம் கன அடி நீர் வெளியேற்ற உள்ளனர். உபரி நீர் திறப்பு காரணமாக குன்றத்தூர், காவனூர், சிறுகளத்தூர், வழுதளம்பேடு, திருமுடிவாக்கம், திருநீர்மலை உள்ளிட்ட 6 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஏரிக்கு பொதுமக்கள் வருவதை தடுக்கும் வகையில் குன்றத்தூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் பாதுகாப்பு கருதி செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்ட நிலையில், இந்தாண்டில் இரண்டாவது முறை ஏரி திறக்கப்பட உள்ளது.