கச்சத்தீவு விவகாரத்தில் நிரந்தர தீர்வு காணும் வகையில், இலங்கை அரசுடான ஒப்பந்தத்தை திருத்தி அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கச்சத்தீவை மீட்கக் கோரி, சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார். அப்போது பேசிய அவர், கச்சத்தீவை மாநில அரசு தாரை வார்த்ததாக தவறான புரிதல் உள்ளதாகவும், திமுகவுக்கு எதிராக அரசியல் செய்யப்படுவதாகவும் விமர்சித்தார்.
கச்சத்தீவை இலங்கைக்கு அளிப்பதற்கான ஒப்பந்தத்தை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அப்போதே எதிர்த்ததாகவும், கச்சத்தீவை மீட்பதே தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக அமையும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டார். கச்சத்தீவை மீட்பதற்கு மத்திய பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சாடிய முதலமைச்சர் ஸ்டாலின், இதுதொடர்பாக இலங்கை அரசுக்கு பிரதமர் மோடி வலியுறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.