திருமாவளவன், ராமதாஸ் Pt web
தமிழ்நாடு

திமுக கூட்டணியில் பாமக இணைவதில் சிக்கல்.. கறார் காட்டும் திருமா.. 14 ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்ன?

பாமக இடம்பெறும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெறாது; இது இன்று எடுத்த முடிவு அல்ல 14 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த முடிவு என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 14 ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்தது? பார்க்கலாம்...

PT WEB

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் 2026 சட்டமன்றப் பொது தேர்தலுக்கான பரபரப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது. அரசியல் கட்சிகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணக்கை போடுகின்றன. பிரதான திராவிட கட்சிகளாக இருக்கும் திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இணையப் போகின்றன. எந்ததெந்த கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறப் போகின்றன என்ற கணக்குகள் தான் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தமிழகத்தில் முக்கிய கட்சிகளுள் ஒன்றாக உள்ள பாமக ஏறத்தாழ கடந்த 1 வருடத்திற்கு மேலாக பாமக ராமதாஸ் தரப்பு, அன்புமணி தரப்பு என இரண்டு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. அதில், அன்புமணி தலைமையிலான பாமக அதிமுக கூட்டணியில் இணைந்து விட்டது. ஆனால், ராமதாஸ் தலைமையிலான பாமக இன்னும் எந்த கூட்டணிக்கு செல்வது என்று முடிவு எடுக்கவில்லை. இந்த சூழ்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் திமுக பக்கம் செல்வாரா அல்லது தவெக பக்கம் செல்வாரா என்ற கேள்வி எழுந்துவருகிறது.

பாமக நிறுவனர் ராமதாஸ்

இவ்வாறு, ராமதாசுக்கு இரண்டு வாய்ப்புகள் இருந்தாலும் திமுக கூட்டணியில் பாமக இடம்பெறுவதில் தற்போது சிக்கலும் இருக்கிறது. ஏனென்றால், ஏற்கனவே திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருந்து வருகிறது. ஆகவே, விடுதலை சிறுத்தைகள் கட்சியா? அல்லது ராமதாஸ் தலைமையிலான பாமகவா? என்று பார்த்தால் திமுகவின் கணக்கு விடுதலை சிறுத்தையாக தான் இருக்கிறது. ஆகையால், தற்போது வரையில் நேரடியாக ராமதாஸ் தலைமையிலான பாமகவை தங்கள் கூட்டணியில் இணைய வேண்டும் என்று திமுக அழைக்கவில்லை.

இந்த நெருடலுக்கு காரணம், பாமக திமுக கூட்டணிக்குள் வந்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியேறி விடுமோ என்ற ஒரு தயக்கமும் திமுகவுக்கு இருக்கிறது. விசிக இருக்கும் கூட்டணியில் பாமக இடம் பெறுமா? என்ற கேள்விக்கு, அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியது திமுக கூட்டணியில் பாமக இடம்பெறுவதில் தனக்கு எந்த தயக்கமும் இல்லை என்பதை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.

ஆனால், இங்கு முரண்டு பிடிப்பது விடுதலை சிறுத்தை கட்சிதான். ஆம், பாமக இருக்கும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்காது என்ற முடிவை கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பே எடுத்து விட்டேன். இன்றும் அதே நிலைப்பாட்டில் தான் இருக்கிறேன் என ஒரே போடாக் போட்டு இருக்கிறார் திருமாவளவன்.

அப்படி 14 ஆண்டுகளுக்கு முன்பாக என்ன‌தான் நடந்தது..? ஏன் விடுதலை சிறுத்தைகள் கட்சி பாமக இடம்பெறும் கூட்டணியில் இடம்பெறாது என்று திருமாவளவன் கூறுகிறார் என்று பார்த்துவிடலாம்.

திருமாவளவன் - ராமதாஸ்

கடந்த, 2011 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும், பாட்டாளி மக்கள் கட்சியும் இணைந்து தேர்தலை சந்தித்தது. ஆனால், அந்த தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கவில்லை. தேர்தல் களத்தில் பாமகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஒன்றாக இருந்தது பெரிய பலனை திமுக கூட்டணிக்கு அளிக்கவில்லை என்ற கருத்து நிலவியது. அதன் பிறகு, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், பாட்டாளி மக்கள் கட்சிக்கும் இடையே சிறு சிறு கருத்து மோதல்கள் இருந்து வந்தது. இதையடுத்து, 2012 ஆம் ஆண்டு நடந்த தர்மபுரி கலவரம், 2013 ஆண்டு நடந்த மரக்காணம் கலவரம் போன்ற சம்பவங்கள் பாமக -விசிக இடையேயான பிரச்சனையை தீவிரமாகியது.

வன்னியர்களுக்கு ஆதரவாக பாமக-வும், தலித்துகளுக்கு ஆதரவாக விசிக-வும் களத்தில் இறங்கி செயல்பட்டன. அதற்கு முன்புவரை ராமதாசும் , திருமாவளவனும் தமிழ் மொழிக்கான முன்னெடுப்புகள், சமூக பிரச்சனைகள், ஈழப் பிரச்சனை போன்றவற்றில் இணைந்து செயலாற்றி இருந்தாலும், 2011-க்கு பிறகு எதிரெதிர் துருவங்களாக மாறிப்போயினர். 2011-க்கு பிறகு நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் பாமகவும், விசிகவும் ஒரே கூட்டணியில் இடம் பெறவில்லை.

பாமக உட்கட்சிப் பூசல்

இப்படிப்பட்ட சூழ்நிலைதான் கடந்த ஆண்டு பாமகவில் விரிசல் உண்டானது. ராமதாஸ் தலைமையிலான பாமக, அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக என இரண்டாக பிரிந்தது. இந்த பிரச்சனையில் ஒவ்வொரு கட்சியும் ராமதாஸா? அன்புமணியா? என ஆதரவு கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அதில், ராமதாசுக்கு ஆதரவாக திருமாவளவன் கருத்துக்களை தெரிவித்தார்.

இவ்வாறு, அரசியல் களம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த வேளையில், 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது. இந்த சூழலில், அன்புமணி தலைமையிலான பாமக அதிமுக கூட்டணியில் இணைந்து விட்டது. ராமதாஸ் தலைமையிலான பாமக எந்த கூட்டணியில் இடம் போகிறது என்ற கேள்வி இருந்து வருகிறது. அதேசமயத்தில், அன்புமணி தரப்பு பாமக அதிமுகவுடன் சென்று விட்டதால், ராமதாஸ் தரப்பு பாமக திமுக கூட்டணிக்கு செல்லலாம் என்ற கருத்தும் நிலை வருகிறது. ஆனால், அதற்கு விசிக முட்டுக்கட்டை போட்டு இருக்கிறது.

பாமக இடம்பெறும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இடம் பெறாது என்றும் கூட்டணிக்குள் பாமகவை இணைத்துக் கொள்வது குறித்து திமுக தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் திருமாவளவன் தெரிவித்திருக்கிறார். இந்த சூழலில், திமுக என்ன முடிவு எடுக்கப்போகிறது என்று பலரும் உற்று நோக்கிக் வருகிறார்கள். பொறுத்திருந்து பார்க்கலாம்..