கரூரில் தவெக பரப்புரையில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் இதற்குமுன் கூட்ட நெரிசலால் நிகழ்ந்த உயிரிழப்புகள் மற்றும் இந்தாண்டு இந்தியாவில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவங்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம்...
1992ஆம் ஆண்டு கும்பகோணம் மகாமகம் குளத்தில் புனித நீராட பக்தர்கள் கூடியிருந்தபோது நிகழ்ந்த விபத்து, மொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குளிக்கச் சென்ற இடத்திற்கு அருகில் நெரிசல் ஏற்பட்டது. அப்போது குளக்கரையில் இருந்த ஒரு கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
2005ஆம் ஆண்டு சென்னை எம்.ஜி.ஆர். நகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டது. அப்போது, டோக்கன்களைப் பெறுவதற்காக மக்கள் முண்டியடித்ததில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 42 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து, 2019 முத்தையம்பாளையம், திருச்சி கருப்பசாமி கோயிலில் சித்ரா பௌர்ணமி விழாவின்போது சாமியாரிடம் இருந்து காசு பெறும் 'பிடிக்காசு' நிகழ்வின்போது கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில், பிடிக்காசு வாங்க மக்கள் முண்டியடித்ததில் 7 பேர் உயிரிழந்தனர். ஆனாலும் இந்தியாவில், அரசியல் கட்சித் தலைவரின் கூட்டம் ஒன்றில், நெரிசலால் இத்தனை அதிகமான உயிரிழப்புகள் நேரிட்டுள்ளது இதுவே முதன்முறையாகும்.
இந்தாண்டு ஜனவரியில், உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 30 பேர் உயிரிழந்தனர்.
அதேமாதம் 8ஆம் தேதி, திருப்பதி ஏழுமலையான் கோயில் வைகுண்ட துவார தரிசன டிக்கெட்டிற்காக பக்தர்கள் முண்டியடித்ததில், 6 பேர் பலியாகினர்.
பிப்ரவரியில் டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில், 18 பேர் உயிரிழந்தனர்.
மே மாதத்தில், கோவாவின் ஷிர்வால் கிராமத்திலுள்ள லாயிராய் தேவி கோயில் திருவிழாவில், கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் 6 பேர் உயிரிழந்தனர்.
ஜூன் மாதம் பெங்களூருவில், ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில், 11 பேர் பலியாகினர்.
கடந்தாண்டு ஜூலையில், உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸில் பிரார்த்தனை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில், 121 பேர்களின் உயிர் பறிபோனது.
கடந்தாண்டு டிசம்பரில், நடிகர் அல்லு அர்ஜூன் ஹைதராபாத் திரையரங்கிற்கு சென்றபோது ஏற்பட்ட கூட்டநெரிசலில், பெண் ஒருவர் உயிரிழந்தார்.
2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தூர் கோயிலில், படிக்கிணற்றின் மேல் கட்டப்பட்டிருந்த தளம் இடிந்து விழுந்து ஏற்பட்ட நெரிசல் 36 பேரின் உயிரைப் பறித்தது.
2022 ஜனவரியில், ஜம்மு - காஷ்மீர் வைஷ்ணோதேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 12 பேர் உயிரிழந்தனர்.