விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வசித்துவருகின்றனர் வடிவேலு - பவானி தம்பதி. தங்களின் 7 வயது மகளுக்கு கடந்த 11 ஆம் தேதி இவர்கள் பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். வீட்டில் புத்தாடை அணிந்து, கேக் வெட்டி மகிழ்ச்சியாக பிறந்தநாள் கொண்டாடிவிட்டு பெற்றோருக்கு அருகிலேயே உறங்கிப் போன சிறுமி மறுநாள் காலை மாயமானதாக தெரிகிறது. அதிகாலை 3 மணியில் இருந்தே சிறுமியைக் காணாததால் கலக்கமடைந்த பெற்றோர் பதற்றத்துடன் வீட்டின் அக்கம்பக்கத்தில் தேடிப் பார்த்துள்ளனர். சிறுமி எங்கும் கிடைக்காததால் கலக்கமடைந்த பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில், சிறுமி மாயமான வழக்கில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் பல்வேறு பகுதிகளில் குழந்தையை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டதாக தெரிகிறது. பறக்கும் ட்ரோன் கேமரா கொண்டும், மோப்பநாய் உதவியுடனும் சிறுமியை தேடும் பணியை மேற்கொண்டுள்ளது காவல் துறை.
சிறுமியைத் தேட அமைக்கப்பட்ட 5 தனிப்படைகளும், சிசிடிவி கேமரா, செல்போன் பதிவுகளை ஆய்வு செய்தும், சிறுமியின் வீட்டை சுற்றியுள்ள மலைக் குன்றுகள், குளங்கள் மற்றும் விவசாய கிணறுகள் ஆகியவற்றில் தீயணைப்பு துறை உதவியுடன் தேடிப் பார்த்தபோதும் சிறுமி குறித்து எந்த துப்பும் கிடைக்காதது அப்பகுதி மக்களை கலக்கமடையச் செய்துள்ளது.
இந்நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கையாக சிறுமியின் புகைப்படம், அடையாளம் உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப்பட்ட நோட்டீஸ்களை விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் அண்டை மாவட்டங்களிலும், பேருந்து, ரயில் நிலையம் என மக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும் ஒட்டி தேடுதல் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. விழுப்புரத்தில் போக்சோ வழக்கில் தொடர்புடைய நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அதில் சிறுமி வசித்த பகுதிகளைச் சேர்ந்த 18 நபர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 120 சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகள் கைப்பற்றப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சிறுமி பிறந்தநாள் கொண்டாடிய போது உடனிருந்த சிறுமியின் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் மீதும் போலீஸ் கவனம் திரும்பியிருக்கிறது.
இந்நிலையில், 5 தனிப்படையை தற்போது 8 ஆக அதிகரித்து விசாரணை முடுக்கிவிடப்பட்டிருக்கிறது. அடுத்தகட்டமாக சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கஞ்சா குற்றவாளிகள், சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த தனிப்படை திட்டமிட்டுள்ளது. சிறுமி வீட்டினருகே இருக்கக் கூடிய கழிவுநீர் தொட்டிகளையும் சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சிறுமியின் வீட்டில் இருந்து 10 கி.மீ. சுற்றளவில் பதிவான சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்யும் பணியையும் தனிப்படை மேற்கொள்ள உள்ளது. சிறுமி கிடைக்க வேண்டுமென்பது பெற்றோர் மட்டுமின்றி அப்பகுதி மக்களின் ஏக்கமாக மாறியிருக்கிறது.