யானை தந்தம்
யானை தந்தம் file image
தமிழ்நாடு

23 கிலோ எடையில் யானை தந்தங்கள்.. 50 லட்சம் ரூபாய் மதிப்பு.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்!

யுவபுருஷ்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வழியாக தூத்துக்குடி துறைமுகத்திற்கு யானை தந்தங்கள் கடத்தப்பட இருப்பதாக மத்திய வருவாய் குற்ற புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலையடுத்து ராஜபாளையம், ஶ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு சுற்றுவட்டார மலையடிவார பகுதியில் புலனாய்வுத்துறை அதிகாரிகள்‌ விசாரணை தொடங்கினர். 

விசாரணையில் வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் யானை தந்தங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற அதிகாரிகள் நெடுங்குளத்தை சேர்ந்த முத்துக்காளை, ராஜபாளையத்தை சேர்ந்த முருகன் ஆகிய இருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து ராஜபாளையம் சுங்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் அதிகாரிகளின் பிடியிலிருந்து ராஜபாளையம் பி.எஸ்.கே.நகரை சேர்ந்த முருகன் என்பவர் தப்பமுயன்று சுங்கத்துறை அலுவலகத்தின் முதல் மாடியிலிருந்து கீழே குதித்துள்ளார். இதில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து படுகாயமடைந்த முருகன் மீட்கப்பட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து புலனாய்வு துறை அதிகாரிகளின் பிடியில் இருந்த முத்துக்காளையிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தது. மேற்குத்தொடர்ச்சி மலையில் வாழும் மலைவாழ் இனத்தை சேர்ந்த முத்து, சின்னசாமி, முத்தையன் ஆகிய மூவரும் மாடு மேய்பதற்காக அடர்வனப் பகுதிக்குள் சென்றுள்ளனர்.

அப்போது வனத்திற்குள் உள்ள நீர்குட்டை அருகே ஒரு யானை இறந்து கிடந்துள்ளது. இதைப்பார்த்த மூவரும், யானையின் தந்தங்களை வெட்டியெடுத்து முத்துக்காளைக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பதுக்கியுள்ளனர். கள்ளச்சந்தையில் யானை தந்ததிற்கு நல்ல விலை இருப்பதால், அதனை விற்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த முயற்சியில் மேலும் 5 பேர் இணைந்துள்ளதும் தெரிய வந்தது.

யானை

இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் உதவியுடன், வத்திராயிருப்பு மலையடிவாரத்திற்கு சென்ற அதிகாரிகள் விவசாய நிலத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டு யானை தந்தங்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு யானை தந்தங்களும் சுமார் 5 அடி உயரமும், 23 கிலோ எடையும் இருந்துள்ளது. இதன் சந்தை மதிப்பு ரூபாய் 50 லட்சத்திற்கும் மேல் இருக்கலாம் என கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக, 10 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள வனத்துறையினர், மம்சாபுரத்தை சேர்ந்த வினித்குமார், கார்த்திகேயன், ராஜபாளையத்தை சேர்ந்த முருகன், சதீஷ் குமார், செண்பக தோப்பை சேர்ந்த கணேசன், கிருஷ்ணன் கோயிலை சேர்ந்த கார்த்திக் ராஜா மற்றும் நெடுங்குளத்தை சேர்ந்த முத்துக்காளை ஆகிய 7 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

அவர்களிடம் வனப்பகுதியில் யானை வேட்டையாடப்பட்டதா? உண்மையில் யானை தந்தங்கள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டன ? எந்த நாட்டுக்கு கடத்தப் பட இருந்தது என்பது தொடர்பாக மாவட்ட உதவி வன அலுவலர் நிர்மலா, ராஜபாளையம் வனச்சரக அலுவலர் சரண்யா ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய முக்கிய குற்றவாளிகளான முத்து, சின்னச்சாமி, முத்தையன் ஆகியோரை வனத்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.