பெரியார் சிலை உடைப்பு கருத்து, திமுக எம்.பி. கனிமொழி மீது விமர்சனம் செய்தது தொடர்பான வழக்குகளில் தமிழக பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா குற்றவாளி என சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து ஒரு வருட சிறை தண்டனை வழங்கியநிலையில், பின்னர் அதனை நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஹெச்.ராஜா கடந்த 2018 ம் ஆண்டு மார்ச் மாதம் பெரியார் சிலையை உடைப்பேன் என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். மேலும், 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திமுக எம்பி கனிமொழிக்கு எதிராகவும் ட்விட்டரில் (இப்போது எக்ஸ் தளம்) கருத்து பதிவு செய்திருந்தார்.
இந்தநிலையில், இதுதொடர்பாக ஈரோடு நகர காவல்துறை, மற்றும் கருங்கல்பாளையம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, காவல்துறை தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், மேற்கண்ட இரண்டு அவதூறு வழக்குகளில் சென்னை எம்.பி, எம்.எல்.ஏ மீதான குற்ற வழக்குளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல், எச். ராஜா குற்றவாளி என தீர்ப்பளித்தார். அத்துடன், H. ராஜாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.
இதனால், எச்.ராஜா உடனடியாக சிறைக்கு செல்ல வேண்டும் என்பதால், இவ்வழக்கில் மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும் இதனால் கால அவகாசம் வேண்டும் என்றும் எச் ராஜா தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், எச்.ராஜாவின் ஒரு வருட கால சிறைதண்டனையை நிறுத்திவைத்து நிதிபதி தீர்ப்பு வழங்கினார். இது தன் மீதான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என அவர் கூறியுள்ளார்.