உயிரிழந்த ரியாஸ், ரம்புட்டான் பழம் pt web
தமிழ்நாடு

ரம்புட்டான் பழத்தின் விதை தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் மரணம்.. நெல்லையில் சோகம்!

திருநெல்வேலியில் ரியாஸ் எனும் 5 வயது சிறுவன், ரம்புட்டான் பழத்தின் விதை தொண்டையில் சிக்கிய நிலையில் மூச்சுத் திணறலால் உயிரிழந்தார்.

PT WEB

செய்தியாளர் மருதுபாண்டி

திருநெல்வேலி மாநகரப் பகுதிக்கு உட்பட்ட மேலப்பாளையம் தெற்கு தைக்கா தெருவை சேர்ந்தவர் நிஜாம். 32 வயதாகும் இவர் அரேபிய நாட்டில் பணியாற்றி வருகிறார். இவருக்கு 5 வயதில் ரியாஸ் எனும் மகன் இருக்கிறார்.

ரம்புட்டான் பழம்

இந்நிலையில், வீட்டில் இருந்த ரம்புட்டான் பழத்தை சிறுவன் ரியாஸ் உண்டிருக்கிறார். அப்போது விதை தொண்டையில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் மூச்சு விட முடியாமல் ரியாஸ் திணறியுள்ளான்.

இதனை அடுத்து ரியாஸின் குடும்பத்தினர் உடனடியாக சிறுவனை மேலப்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். சிறுவனை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மூச்சுக் குழாயில் ரம்புட்டான் பழத்தின் விதை சிக்கிக் கொண்டதால் மூச்சு விட முடியாமல் திணறி சிறுவன் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இது குறித்த தகவல் வெளிநாட்டில் உள்ள சிறுவனின் தந்தைக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் உடனடியாக நாடு திரும்பியுள்ளார். ரம்புட்டான் பழத்தை விதையுடன் சாப்பிட்டு சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பாக காவல்துறையிடம் விசாரித்த போது சிறுவன் உயிரிழப்பில் சட்டம் சார்ந்து பிரச்சனை ஏதும் இல்லாததால் உடற்கூறு பரிசோதனைக்கு உட்படுத்தவில்லை என விளக்கம் அளித்தனர். உறவினர்கள் யாரும் சிறுவன் உயிர் இழப்பில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தால் அது குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

ரம்புட்டான் பழம்

ரம்புட்டான் பழம் அதிக சத்துக்கள் நிறைந்ததுதான். ஆப்பிள், பேரிச்சம் பழத்திற்கு இணையான நார்ச்சத்துகளைக் கொண்டது. விலையும் மிக அதிகமில்லை என்பதால் அனைத்து தரப்பினரும் சாப்பிடும் பழமாகவே ரம்புட்டான் பழம் இருக்கிறது. ஆனாலும், உயர் ரத்தம் அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் முதலியோர் மருத்துவரின் ஆலோசனைப்படிதான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், ரம்புட்டான் பழம் அதிகமாக பழுக்கும்போது, அதில் உள்ள fructose மற்றும் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும்.. இது இன்சுலின் அளவை பாதிக்கலாம்.

சமீபத்திய ஆய்வுகளின்படி, ரம்புட்டான் விதையில் saponin மற்றும் tannin போன்ற நச்சுத் தன்மை கொண்ட விஷயங்கள் இருக்கின்றன. ரம்புட்டான் விதையில் நார்கோட்டிக் விஷத்தன்மை உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இது சாப்பிடுபவரை கோமாவிற்கு அழைத்துச் செல்லும் அபாயம் இருப்பதாகவும், உயிரைப் பறிக்கும் அபாயமும் இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி கொட்டை அதிக வழவழப்புத் தன்மையுடன் இருப்பதால் குழந்தைகளுக்கு கொடுக்கும்போது அதிக கவனம் தேவை. குழந்தைகளுக்கு ரம்புட்டான் பழத்தைக் கொடுக்கும்போது விதையை நீக்கிய பின்பே கொடுக்கவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்..