புத்தகக் கண்காட்சி pt web
தமிழ்நாடு

விரைவில் தொடங்குகிறது சென்னை 48 ஆவது புத்தகக் காட்சி.. கடந்த கால குறைகள் சரிசெய்யப்படுமா?

48 ஆவது சென்னை புத்தகக் காட்சி தொடங்க உள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்துவருகின்றன. கடந்த புத்தகக் காட்சியில் சுட்டிக்காட்டப்பட்ட குறைகளைகளையும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பபாசி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

PT WEB

48 ஆவது புத்தகக் காட்சி வரும் 27ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் 2 லட்சம் சதுர அடி பரப்பில் அரங்கங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பல்வேறு பிரிவுகளில் 100க்கும் மேற்பட்ட தலைப்புகளில் 900 அரங்கங்கள் அமைக்கும் பணியை தொழிலாளர்கள் இரவு பகலாக மேற்கொண்டு வருகிறார்கள்.

சென்னை புத்தகக் காட்சிக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து வாசகர்கள் பலர் வருகை தருவார்கள் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் கண்காட்சியின் இயக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து கருத்துக்கள் கேட்கப்படுகின்றன. அதன்படி இந்த வருடம் பல புதுமையான முன் முயற்சிகளை தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் மேற்கொண்டுள்ளது. கடந்த வருடம் பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கள்ளப்பட்டுள்ளதாக பபாசியின் செயலாளர் முருகன் தெரிவித்துள்ளார்.

சுமார் 15,000 கார்களை நிறுத்தும் வகையிலும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையிலும் வாகன நிறுத்தும் இடங்கள் மேம்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குலுக்கல் முறையில் புத்தக விற்பனையாளர்களுக்கான அரங்கங்கள் ஒதுக்கப்பட்டு இரண்டு நாட்களுக்குள் அரங்கம் வடிவமைக்கும் பணிகள் முழுமையாக முடிவடையும் எனக் கூறப்பட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கியதை போலவே இந்த ஆண்டும் புத்தகக் காட்சிக்கு சுமார் 75 லட்ச ரூபாய் நிதியை தமிழ்நாடு அரசு வழங்கி இருப்பதாகவும் போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்காக சென்னை மாநகர காவல் துறையோடு இணைந்து பேசி வருவதாகவும் நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள். 17 நாட்கள் நடைபெற உள்ள புத்தகக் காட்சியில் 7 நாட்கள் முழு நாட்களாக நடைபெற உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் மூப்பனார் பாலத்திற்கு அருகிலும் சைதாப்பேட்டையிலும் புதிய வழிகள் உருவாக்குவதற்கான யோசனையும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கடந்த வருடம் 15 லட்சம் வாசகர்கள் வந்த நிலையில் இந்த வருடம் 20 லட்சம் பேர் பார்வையாளர்களாக வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக பபாசி நிர்வாகிகள் கூறி இருக்கிறார்கள். கடந்த புத்தகக் காட்சியில் சுட்டிக்காட்டப்பட்ட குறைகளைகளையும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பபாசி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.