வேலூரில் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி ஆட்டோவில் ஆண் நண்பருடன் சென்ற பெண் மருத்துவர் கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்த பார்த்திபன், பரத், மணிகண்டன், சந்தோஷ்குமார் மற்றும் இளம் சிறார் ஒருவர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் இளம் சிறார் ஒருவரை தவிர்த்து மற்ற 4 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கின் சிறப்பு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட டிஎஸ்பி ரவிச்சந்திரன் 496 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை வேலூர் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். குற்றப்பத்திரிக்கையை தொடர்ந்து வழக்கு விசாரணை எண் 22/2022ஆக பதிவு செய்யப்பட்டது. மேலும் வழக்கில் அதிகபட்ச தண்டனைக்கான முகாந்திரம் இருந்ததால் கூடுதல் மகளிர் நீதிமன்றத்திலிருந்து விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் வழக்கின் தீர்ப்பு 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கொடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த மகிளா நீதிமன்றம், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பார்த்திபன், பரத், மணிகண்டன், சந்தோஷ் ஆகியோருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.25,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
மேலும் இன்று நான்கு பேருக்கு தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் மீதமுள்ள இளஞ்சிரார் ஒருவருக்கு நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. முன்னதாக இன்றைய தினம் குற்றவாளிகள் நீதிமன்றம் வந்தபோது அவர்களை புகைப்படம், வீடியோ எடுக்க முயன்ற ஒளிப்பதிவாளர்களை குற்றவாளிகள் தாக்கினர். அது நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.