மோசடியில் ஈடுபட்ட நபர்கள் கைது
மோசடியில் ஈடுபட்ட நபர்கள் கைது PT WEB
தமிழ்நாடு

சென்னை : வங்கியில் போலி ஆவணம் வைத்து ரூ. 7 கோடி மோசடி; ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அதிரடி கைது!

PT WEB

செய்தியாளர் - ஆனந்தன்

சென்னை அடுத்த ஆவடியில், சிட்டி யூனியன் வங்கி மேலாளர் விஜய கணேஷ் என்பவர், சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் மனுவொன்று அளித்துள்ளார். அந்த மனுவில், "போலியான சொத்து ஆவணங்களைச் சமர்ப்பித்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் ‘காமதேனு’ என்ற நகைக்கடையை நடத்தி வருபவர்களுமான விஷ்ணு சர்மா, சமத் பாய் சர்மா, வினோத் சர்மா, விவேக் சர்மா, சர்மிளா சர்மா, மற்றும் சப்னா சர்மா ஆகிய 6 பேர் தொழில் கடனாக ரூ.7 கோடி எங்கள் வங்கியில் பெற்றுள்ளனர். தற்போது அவர்கள் வாங்கிய கடன் தொகையைத் திருப்பி செலுத்தாமல் இருந்து வருகின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த புகாரைப் பெற்றுக் கொண்ட சென்னை பெருநகர காவல் ஆணையர், மத்திய குற்றப்பிரிவு, வங்கி மோசடி புலனாய்வு பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், வங்கியை ஏமாற்றும் நோக்கில், ஆவடி விளிஞ்சம்பாக்கத்தில் அமைந்துள்ள 3,474 சதுரடி காலி நிலம் கொண்ட சொத்தினை அடமானம் வைத்து அவர்கள் கடன் பெற்றுள்ளதும், இந்த சொத்து மீதான ஒரு வழக்கு பூந்தமல்லி உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

இந்த உண்மையை மறைத்து இந்த சொத்தை அடைமானமாக வங்கியில் சமர்ப்பித்து தொழில் கடன் ரூ.7 கோடி பெற்றதில், ரூ.3 கோடியே 15 லட்சம் வங்கிக்குத் திருப்பி செலுத்தாமல் ஏமாற்றியுள்ளதும் தெரியவந்தது.

இதையடுத்து மோசடியில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வினோத் சர்மா(47), விவேக் சர்மா, சர்மிளா சர்மா(42), சப்னா சர்மா(36) ஆகியோரை கைது செய்து எழும்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.