செய்தியாளர்: சாந்த குமார்
பல்லாவரம் மலை மேடு பகுதி மக்கள் 30 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, தலை சுற்றல் ஏற்பட்ட நிலையில் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் இருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை பல்லாவரம் அடுத்த மலைமேடு முத்தாலம்மன் கோயில் தெரு, மாரியம்மன் கோயில் தெருவில் வசிக்கும் 30 பேருக்கு நேற்றிரவு திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைசுற்றல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன. இதனையடுத்து, உடனடியாக அனைவரும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
8 ஆண்கள், 15 பெண்கள் உட்பட மொத்தம் 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 4 பேருக்கு கடுமையான வயிற்று வலி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சிகிச்சையில் இருந்த திருவீதி, மோகன்ராஜ் என்ற இருவர் தற்போது உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் பின்னணியில் மலைமேடு பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளதாகவும் அதனை குடித்ததால்தான் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டது என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதையடுத்து, காவல்துறையினர், தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம், கண்டோன்மெண்ட் நிர்வாகத்தினர் என முக்கிய நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் அப்பகுதிக்கு சென்று விசாரணை செய்துவருகிறனர். குடிநீர்தான் உடல்நல பாதிப்புக்கு காரணமா என்ற கோணத்தில் விசாரணை தொடர்கிறது.