திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் வடமாநில தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியில் 3 வயது பெண் குழந்தை காணாமல் போய், முட்புதரில் காயங்களுடன் மீட்கப்பட்டார். முதலில் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் சென்னை ஸ்டேன்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். பாலியல் வன்கொடுமை சந்தேகத்தில் பீகாரை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் 300-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்குள்ள தொழிற்சாலைகளில் பல்லாயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சிப்காட் சுற்றுப்பகுதிகளில் பீகார், உத்தரப்பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களில் இருந்து குடும்பத்துடன் வந்துவாடகைக்கு வீடு எடுத்து தங்கி வேலை செய்து வருகின்றனர்.
சிப்காட் பகுதியில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் குடியிருப்பில் 3 வயது பெண் குழந்தை காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பொது மக்கள் உதவியுடன் தேடியபோது பெண்கள் சிலர் முட்புதரில் 3 வயது குழந்தை காயங்களுடன் உடல்நலம் குன்றி இருப்பதைக் கண்டு மீட்டனர்.
குழந்தைக்கு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவ மனையில் முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டேன்லி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு,அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே முட்புதரிலிருந்து பச்சிளம் குழந்தை மீட்கப்பட்ட நிலையில் கொடூர செயலில் ஈடுபட்டதாக வட மாநில இளைஞரை பொது மக்கள் பிடித்து அடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
சிறுமியை ஒரே அறையில் இருந்த வட மாநில இளைஞர்கள் 4 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாகவும், அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சிப்காட் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறையினர் சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட பீகாரை சேர்ந்த பிபின் மஞ்சி (19) என்ற குற்றவாளியை கைது செய்துள்ளதாக கூறினர். தொடர்ந்து பொது மக்களை சமரசம் செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவம் கூட்டு பாலியல் துன்புறுத்தலா என விசாரணையில் தெரியவரும்.