BTS - காட்பாடி ஜங்ஷன்
BTS - காட்பாடி ஜங்ஷன் புதிய தலைமுறை
தமிழ்நாடு

கரூர் | BTS இசைக்குழுவை காண வீட்டைவிட்டு சென்றார்களா 3 அரசுப்பள்ளி மாணவிகள்? காவல்துறை விளக்கம்!

webteam

செய்தியாளர் - வி.பி. கண்ணன்

----------

கரூர் ராயனூர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த 3 மாணவிகள் 8 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் பள்ளிக்குச் சென்ற 3 மாணவிகளும் மாலை பள்ளி முடிந்த பிறகு வீடு திரும்பவில்லை. இதையடுத்து மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கு சென்று விசாரித்துள்ளனர். அப்போது அந்த மாணவிகள் பள்ளி முடிந்த பிறகு கிளம்பி விட்டதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

Police station

இந்நிலையில், பள்ளி அருகில் உள்ள கோயில் ஒன்றில் மூன்று மாணவிகளின் சீருடை அவிழ்த்து வைக்கப்பட்டிருந்தது. இது குறித்து அருகில் விசாரித்த போது, மாணவிகள் தங்களது பெற்றோருக்கு பிறந்த நாள் எனக்கூறி சீருடையை அவிழ்த்து வைத்துவிட்டு, மாற்று உடையை அணிந்து கொண்டு சென்றது தெரிய வந்துள்ளது. இதையடுத்து பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், மூன்று மாணவிகளும் எங்கு சென்றனர் என்பது குறித்து தான்தோன்றிமலை காவல் நிலைய போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் காணாமல்போன மூன்று மாணவிகளும் இன்று காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து ரயில்வே போலீசாரால் மீட்கப்பட்டுள்ளனர். மாணவிகள் தனியே வந்ததையடுத்து, சந்தேகத்தின்பேரில் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த மாணவிகள் கரூரைச் சேர்ந்தவர்கள் என்பது காவலர்களுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து காட்பாடி போலீசார் கரூர் மாவட்ட போலீசாருக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து அந்த மாணவிகளை கரூர் அழைத்து வர மாவட்ட காவல்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில், மூன்று பள்ளி மாணவிகளும் தென்கொரிய இசைக்குழுவான BTS-ஐ காண வேண்டும் என்ற ஆசையில் வீட்டைவிட்டு வெளியேறி கொரியா செல்ல முயன்றதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது.

BTS

இது குறித்து மாவட்ட காவல்துறையிடம் நாம் விசாரித்த போது, “இது தொடர்பாக எந்த தகவலும் இல்லை. மாணவிகளை அழைத்து வந்து விசாரணை நடத்திய பிறகே எங்கே சென்றார்கள், எதற்காக சென்றார்கள் என்பது தெரியவரும்” என்று தெரிவித்தனர்.

மேற்கொண்டு காவல்துறை தரப்பில் மாணவிகள் குறித்து தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. அதேநேரம் தொடர்ந்து இவ்விஷயத்தில் விசாரணை நடந்துவருவதாகவும், முழு விவரமும் தெரியவில்லை என்பதால் வதந்திகள் பரப்பவேண்டாம் எனவும் மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.