விசிக கொடிக்கம்பம் web
தமிழ்நாடு

45 அடிக்கு உயர்த்தப்பட்ட விசிக கொடி.. 3 பேர் பணியிடை நீக்கம்.. என்ன நடந்தது?

மதுரையில் விசிக கொடி ஏற்றப்பட்ட விவகாரத்தில் கொடியேற்றத்திற்கு அனுமதியளித்ததாக 3 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.

PT WEB

மதுரை மாவட்டத்தில் வெளிச்சநத்தம் கிராமத்தில் 25 அடியில் இருந்து 45 அடிக்கு விசிக கொடி உயர்த்தப்பட்ட நிலையில், நேரடியாக கிராமத்திற்கே சென்று விசிக தலைவர் திருமாவளவன் கொடியேற்றினார்.

திருமாவளவன்

இந்நிலையில் அடுத்த நாளே கொடியேற்றத்திற்கு அனுமதி கொடுத்ததாக 3 அரசு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். என்ன நடந்தது? விரிவான பின்னணியை பார்க்கலாம்.

நேரில் சென்று கொடியேற்றிய திருமாவளவன்..

மதுரை மாவட்டம் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சத்திரப்பட்டி வெளிச்சநத்தம் கிராமத்தில் பல ஆண்டுகளாக 25 அடி உயர கொடிக்கம்பத்தில் பறந்துவந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி, இரு தினங்களுக்கு முன்பு 45 அடி உயரத்திற்கு உயர்த்தப்பட்டது.

முன்னதாக, கொடிக் கம்பத்தினை மாற்ற முயன்ற விசிகவினருக்கு கடந்த 7-ம் தேதி அன்று, மாவட்ட வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் வெகுண்டெழுந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், வெளிச்சநத்தம் கிராமத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விசிக கொடிக்கம்பம்

இதனைத் தொடர்ந்து அரசு அலுவலர்கள் விசிகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி, கொடிக் கம்பத்தை நட அனுமதி கொடுத்தனர். இதனையடுத்து, விசிக தலைவர் திருமாவளவன் 8ம் தேதி அன்று நேரடியாக கிராமத்திற்கு சென்று விசிக கொடியை ஏற்றி வைத்தார்.

வெடித்த சர்ச்சை.. 3 பேர் பணியிடை நீக்கம்!

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், விசிகவின் 45 அடி உயர கொடிக்கம்பம் நடுவதில் முறையாக செயல்பட்டு கொடிக்கம்பம் நட்டதை தடுக்கத்தவறிய காரணத்திற்காகவும், சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்து முன்கூட்டியே கவனித்து நடவடிக்கை எடுக்க தவறியதாகவும் கூறி சம்பந்தப்பட்ட வருவாய் ஆய்வாளர் அனிதா, கிராம நிர்வாக அலுவலர் பரமசிவம் மற்றும் கிராம உதவியாளர் பழனியாண்டி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

விசிக கொடிக்கம்பம்

மேலும், துணை தாசில்தார் ராஜேஷ் விளக்கம் பெறப்பட்டுள்ள நிலையில், அவரும் விரைவில் பணியிடை நீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு..

வருவாய்த்துறை அலுவலர்கள் மீதான நடவடிக்கைக்கு, வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு கிராம உதவியாளர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அலுவலர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேலை சந்தித்து வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் இன்று கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.

விசிக கொடிக்கம்பம்

கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் ஆகியோர் உயரதிகாரிகளுக்கு தகவல் மட்டுமே கொடுக்க முடியும், கொடி கம்பம் நடுவதை தடுக்க முடியாது, இந்த விவகாரத்தில் கீழ்நிலை வருவாய் அலுவலர்கள் பலிகடா ஆக்கப்படுகிறார்கள். மேலும் அரசியல் கட்சியினரும் புறம்போக்கு இடத்தில் கொடிக்கம்பங்களை நடுவதற்கு மாவட்ட நிர்வாகம் எந்த அனுமதியும் தரக்கூடாது, அரசியல் கட்சியினரும் அதிகாரிகளிடம் தன்மையோடு நடந்து கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.