முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் web
தமிழ்நாடு

முதல்வரின் சொத்து மதிப்பு என்ன? 90 சவரன் நகைகள்.. வாகனம் இல்லை.. விவரம்!

சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினின் சொத்து விவரம் குறித்து பார்க்கலாம்..

PT WEB

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கொளத்தூர் தொகுதியில் நான்காவது முறையாக போட்டியிடும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் மூலம் அவரது சொத்து விவரங்கள் வெளிவந்துள்ளன. அவரிடம் 3.30 கோடி அசையும் சொத்தும் 4.34 கோடி அசையா சொத்தும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வாகனங்களோ தங்க, வெள்ளி நகைகளோ இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்.23-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. அதைத்தொடர்ந்து வரும் மே 4ம் தேதி தமிழகம் உட்பட அனைத்து 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்த முறை தமிழகத்தில் திமுக, அதிமுக, தவெக, நாதக, சசிகலா-ராமதாஸ் என 5 முனை போட்டி நிலவுகிறது.

முக ஸ்டாலின்

தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில், கொளத்தூர் சட்டசபை தொகுதியில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் இருந்தனர். கடந்த 2011 முதல் கொளத்தூரில் போட்டியிட்டு வருகிறார். 2011, 2016 மற்றும் 2021 தேர்தல்களில் அவர் வெற்றி பெற்றுள்ளார். தற்போது நான்காவது முறையாக இதே தொகுதியில் போட்டியிடுகிறார்.

கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக சார்பில் சந்தான கிருஷ்ணன், நாதக சார்பில் சவுந்திர பாண்டியன், தவெக சார்பில் வி.எஸ்.பாபு ஆகியோர் போட்டியிடுகின்றனர். கொளத்தூர் தொகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் சொத்து மதிப்புகளை குறிப்பிட்டுள்ளார். மு.க.ஸ்டாலினுக்கு அசையும் சொத்து மதிப்பு மூன்று கோடியே 30 லட்சத்து 53 ஆயிரம் இருப்பதாகவும், அசையா சொத்து மதிப்பு ரூ.4 கோடியே 34 லட்சம் உள்ளதாக வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மனைவி துர்கா ஸ்டாலின் பெயரில் ஒரு கோடியே 32 லட்சத்து 67 ஆயிரம் அசையும் சொத்தும், 2 கோடியே 11 லட்சம் அசையா சொத்தும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்

முதல்வர் ஸ்டாலின் பெயரில் பைக்குகள், கார்கள் எதுவும் இல்லை எனவும் ஸ்டாலினிடம் தங்க, வெள்ளி நகைகள் எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துர்கா ஸ்டாலினிடம் 90 சவரன் தங்க நகைகள் இருப்பதாக அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.