ஜெயலலிதா Pt web
தமிழ்நாடு

தொகுதிப்பங்கீடு இழுபறி.. அதிரடி வாக்குறுதிகள்.. 2011 சட்டப்பேரவைத் தேர்தல் பின்னணி.!

தொகுதிப்பங்கீட்டில் கடும் இழுபறி, அதிரடி வாக்குறுதிகள், வரலாறு காணாத வாக்குப்பதிவு என விறுவிறுப்பாக அமைந்தது 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல். இதன் பின்னணியை திரும்பிப் பார்க்கலாம்..

PT WEB

2006 தேர்தல் முடிவுகளில் தொங்கு சட்டசபை அமைந்த நிலையில் 2011 தேர்தலை இரு பெரும் கட்சிகளும் மிக கவனமாக அணுகின. திமுக 11 கட்சிகளுடனும் அதிமுக 8 கட்சிகளுடனும் கூட்டணி அமைத்து தேர்தல் களம் கண்டன. அதிமுக அணியில் இடதுசாரி கட்சிகள், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றன. திமுக அணியில் காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்டவை இடம்பெற்றன. எனினும் தொகுதிப்பங்கீட்டில் திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் கடும் இழுபறி நிலவியது. இறுதியில் காங்கிரசுக்கு 63 தொகுதிகள் தர திமுக சம்மதித்தது.

ஜெயலலிதா - கருணாநிதி

திமுக தனிப்பெரும்பான்மைக்கு கூடுதலாக ஒரு தொகுதியில் மட்டுமே அதாவது 119 தொகுதியில் மட்டுமே போட்டியிட்டது. பாஜக இம்முறை 204 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டது. மதிமுக இத்தேர்தலை புறக்கணித்தது. விலைவாசி உயர்வு, 2ஜி முறைகேடு விவகாரம், மின்வெட்டு ஆகியவை இத்தேர்தலில் பேசுபொருளாகின. மேலும் இலவச அரிசி, மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, லேப்டாப் என கட்சிகள் போட்டிபோட்டு வாக்குறுதிகளை அளித்தன. இத்தேர்தலில் 77.8% வாக்குகள் பதிவாகின. தமிழகத்தில் ஒரு சட்டமன்றத் தேர்தலில் இவ்வளவு வாக்குகள் பதிவானது இதுவே முதல்முறை.

அதிமுக 160 இடங்களில் போட்டியிட்டு 150 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியது. திமுக 23 இடங்களில் மட்டுமே வென்றதால் எதிர்க்கட்சி அந்தஸ்துகூட பெறமுடியாத நிலை ஏற்பட்டது. அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக 29 இடங்களில் வென்று பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்றது. மு.கருணாநிதி திருவாரூர் தொகுதியில் வென்ற நிலையில் ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதா வென்றார். திமுக அமைச்சரவையில் இருந்த 16 அமைச்சர்கள் தோல்வியுற்றனர். ஜெயலலிதா 4ஆவது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றார்.