reunion
reunion file image
தமிழ்நாடு

திருவள்ளூர் | ‘96’ பட பாணியில்.. 45 வருடத்திற்கு பிறகு.. கண்ணீருடன் பகிர்ந்துகொண்ட நினைவுகள்

யுவபுருஷ்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகை பகுதியில் அரசினர் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் கடந்த, 1978ம் ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் 1980ம் ஆண்டு + 2 படித்த மாணவர்கள் பள்ளியில் சந்திப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனையடுத்து, சரியான திட்டமிடலுடன் 45 ஆண்டுகளுக்கு பின்பு அதே பள்ளியில் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு கே.ஜி.கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளியின் தற்போதைய தலைமை ஆசிரியர் எஸ்.ஏ.தாமோதரன் தலைமை வகித்தார். முன்னாள் மாணவர்களுக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்கள் ஈஸ்வர ராவ், நரசிம்மலு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.

தங்களுக்கு பாடம் நடத்திய இந்த இரண்டு ஆசிரியர்களுக்கும், முன்னாள் மாணவர்கள் பாதபூஜை செய்து, நினைவு பரிசுகள் வழங்கி மகிழ்ந்தனர். அதனையடுத்து, ஆசிரியர்கள் தங்களது முன்னாள் மாணவர்களை வாழ்த்தி மகிழ்ந்தனர். நிகழ்ச்சியில், பழைய மாணவர்கள் தங்களது மலரும் நினைவுகளை கண்ணீர் மல்க பகிர்ந்து கொண்டனர். தற்போது பழைய மாணவர்களில் சிலர் மத்திய, மாநில அரசு வேலையில் பணி ஓய்வு பெற்றுள்ளனர்.

சிலர் தொழிலபதிராகவும் உள்ளனர். இந்த சந்திப்பு நிகழ்ச்சியில், 5 மாணவியர் உள்பட, 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து, மதியம் அறுசுவை உணவும், நினைவு பரிசுகளுடன் பிரிந்து சென்றனர்.

முன்னதாக தாங்கள் படித்த பள்ளிக்கு பீரோ, மின்விசிறிகள் என 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வழங்கினர்.

மேலும் இப்போதுள்ள மாணவர்களுக்கு புதிய நவீன கழிப்பறைகள் கட்டி தருவதாகவும் உறுதி கூறினர். ‘96’ பட பாணியில் 45 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் மீண்டும் சந்திப்பு நடத்தி நினைவுகளை பகிர்ந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.