தூத்துக்குடி புதியம்புத்தூரைச் சேர்ந்த 14 வயது சிறுமி, வீட்டில் வளர்த்த நாயுடன் விளையாடும் போது நகக் கீறல் ஏற்பட்டும், ‘வளர்ப்பு நாய்தான்’ என அலட்சியப்பட்டதால் தடுப்பூசி எடுக்கவில்லை. பின்னர் உடல்நிலை மோசமடைந்து, நாய் விஷம் பரவி மதுரை ராஜாஜி மருத்துவமனையில் உயிரிழந்தார். விஷத் தன்மை காரணமாக உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல், அரசே தகனம் செய்தது துயரத்தை அதிகரித்துள்ளது.
செய்தியாளர் - ராஜன் கார்த்திகேயன்
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் ரெடிமேட் பின்னலாடை தொழில் செய்துவருகிறார். இவருடைய மனைவி ஜோதி. இவர்களின் 14 வயது மகள், தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
2 மாதங்களுக்கு முன்பு வீட்டில் வளர்த்த நாயுடன், சிறுமி விளையாடிய போது, அதன் நகங்கள் கீறி உள்ளன. வளர்ப்பு நாய்தானே என்ற எண்ணத்தில் அந்த சிறுமி தடுப்பூசி எதையும் செலுத்திக் கொள்ளவில்லை.
இந்த நிலையில் கடந்த 28 ஆம்தேதி சிறுமிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டடது. அவரை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், நாய் கடித்ததால் அதன் விஷம் உடல் முழுவதும் பரவி உள்ளதாக தெரிவித்தனர். மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
இதனை தொடர்ந்து மாணவியை சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மாணவி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில், உடலை அரசு மருத்துவமனை நிர்வாகம் கொடுக்கவில்லை. காரணம், நாய்க்கடி என்பது விஷ தன்மை உள்ளது. ஆகவே உடலை பெற்றோரிடம் கொடுக்கவில்லை. பின்னர், அரசே மதுரை தத்தனேரி சுடுகாட்டில் மாணவியின் உடலை தகனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. நாய் கடித்த உடனேயே தடுப்பூசி செலுத்தியிருந்தால் சிறுமியின் உயிர் போயிருக்காது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
நாய்க்கடியால் உயிரிழந்ததை கடந்து பெற்றோர்களால் தகனம் கூட செய்யமுடியாத நிலை ஏற்பட்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.