செய்தியாளர்: ராஜன்
தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் அமைந்துள்ளது வஉசி கலைக்கல்லூரி. இங்கு இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பொங்கல் விழாவிற்காக கல்லூரிக்கு வந்திருந்த மாணவர்கள் ஒரே வண்ணத்தில் சட்டை மற்றும் வேஷ்டி அணிந்து பொங்கல் விழாவை கொண்டாடினர். இதையடுத்து மாணவர்கள் தங்களது விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தில் மாணவிகள் முன்பு பைக் சாகசத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த வழியாக சென்ற கல்லூரி மாணவிகள், பொதுமக்கள் அச்சமடைந்தனர். தகவல் அறிந்து வந்த போக்குவரத்து காவல்துறையினர் பைக் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களின் பைக்கை பறிமுதல் செய்ய முற்பட்டனர். அப்போது சிலர் தங்களது பைக் உடன் தப்பிச் சென்றனர்.
இதைத் தொடர்ந்து பைக் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களின் 14 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்ததுடன் பல்வேறு பிரிவுகள் வழக்குப் பதிவு செய்து 1,41,000 ரூபாயை அபராதமாக விதித்தனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.