செய்தியாளர்: S,மோகன்ராஜ்
சேலம் சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மணிவேல். இவர் கடந்த 15 ஆண்டுகளாக தினக்கூலி அடிப்படையில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், இன்று வழக்கம்போல் சேலம் மாநகராட்சி 20 ஆவது கோட்டத்திற்கு உட்பட்ட ரெட்டிப்பட்டி பகுதியில் குப்பைகளை அகற்றும் பணியில் மணிவேல் ஈடுபட்டிருந்தார்.
அப்போது குப்பையில் செயின் ஒன்று கிடந்துள்ளது. அதை எடுத்துப் பார்த்தபோது அது தங்கம் என்பது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக அதனை கொண்டு வந்து சூரமங்கலம் காவல் நிலைய ஆய்வாளரிடம் ஒப்படைத்தார். நேர்மையை கடைபிடித்த தூய்மை பணியாளரை காவல்துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்தனர்.
இதனிடையே ரெட்டிபட்டி அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த பொமிலா என்பவர் தனது தங்கச் செயின் காணாமல் போனது தொடர்பாக சூரமங்கலம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்தார். அப்போது உரிய விசாரணைக்குப் பின்னர் தங்கச் செயின் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.