விஜய் Pt web
தமிழ்நாடு

கோவை | 10 வயது சிறுமி கொலை.. பெற்றோருக்கு முதல்வர் விஜய் ஆறுதல்!

கோவையில் 10 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில், அச்சிறுமியின் பெற்றோரிடம் தொலைபேசி வாயிலாக ஆறுதல் தெரிவித்துள்ளார்.

Premkumar S

கோவை சூலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த 21ஆம் தேதி காணாமல் போனதாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், கண்ணம்பாளையம் பகுதியில் குளக்கரையில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் கொண்டு மேற்கொண்ட விசாரணையில் கார்த்திக், மோகன்ராஜ் என்ற 2 பேரைப் பிடித்தனர்.

இரண்டு பேரிடமும் மேற்கொண்ட விசாரணையில், சிறுமியின் அண்டை வீட்டில் வசிக்கும் 33 வயது இளைஞர் கார்த்தி என்பவர் சிறுமியை கடத்தி சென்று கொலை செய்தது வாக்குமூலம் மற்றும் சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதியானதாக காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கார்த்திக்கு உதவியதாக இருந்த அவரது நண்பர் மோகன்ராஜ் என்பவரையும் கைதுசெய்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். இதனையடுத்து உறவினர்களின் நீண்ட நேர போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இந்நிலையில், குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தான் கொலை செய்யப்பட்டுள்ளதாக கோவை மேற்குமண்டல ஐஜி உறுதிப்படுத்தியுள்ளார்.

இச்சம்பவம், தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், முதல்வர் விஜய் “கோயம்புத்தூரில் நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது” எனத் தெரிவித்திருந்தார்.

முதல்வர் விஜய்

இந்தசூழலில் தான், இன்று சிறுமியின் பெற்றோருக்கு தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டுள்ள முதல்வர் விஜய் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். அப்போது, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.