விராட் கோலியின் செயலை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் பலரும் அவரை ட்விட்டரில் விமர்சித்து வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். குறிப்பாக ரசிகைகளும் அதிகம். எந்த அளவிற்கு விளையாட்டில் ஆக்ரோஷமாக இருப்பாரோ அதேபோல ட்விட்டரிலும் அவர் தீவிரமாகவே செயல்படுவார். அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கேற்றார்போல ரசிகர்களை ஏமாற்றாமல் ட்விட்டரில் அடிக்கடி பல போட்டோக்களையும் கோலி பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் விராட் கோலியின் ஒரு செயலை சுட்டிக்காட்டி பலரும் அவரை ட்விட்டரில் விமர்சித்து வருகின்றனர்.
விலையுயர்ந்த டிஸாட் வாட்ச்சை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கலந்துகொண்டார். அவருடன் பிரபல டென்னிஸ் வீராங்கனை கர்மன் கௌர் தாண்டியும் கலந்துகொண்டார். கர்மன், கோலியை விட உயரமானவர். எனவே கோலி குள்ளமாக தெரியக்கூடாது என்பதற்காக கர்மன் அருகே ஒரு ஸ்டூல் மீது ஏறி நின்று விராட் கோலி புகைப்படம் எடுத்துள்ளார். அதாவது தன்னை உயர்ந்தவராக காட்டிக் கொள்ள இதனை செய்துள்ளார் விராட் கோலி. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் விராட் கோலியை வாய்க்கு ஏற்றவாறு விமர்சித்து வருகின்றனர்.
Read Also -> நாளைய போட்டிக்கு இன்றே அணியை அறிவித்தது இந்தியா !
அதாவது ‘ நீங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஒரு பெண் உங்களை விட உயரம் அதிகமாக இருந்தால் உங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. அப்படித்தானே.. என்ன ஒரு பொறாமை குணம். தற்பெருமை’ என பலரும் விமர்சித்து வருகின்றனர்.
Read Also -> கோலிக்கு 'ரெஸ்ட்' ! மயாங்க் அகர்வாலுக்கு 'சான்ஸ்'
ஆனால் இதற்கு பதிலடி கொடுக்க கோலியின் சமூக வலைத்தள ரசிகர்கள் தவறவில்லை. கோலி உயரமாக தெரிய வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு அவ்வாறு ஸ்டூல் மேல் நிற்கவில்லை என தெரிவித்துள்ளனர். புகைப்படத்தின் அர்த்தம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும் கோலி தன்னை விட உயரத்தில் அதிகமான பெண்களுடன் சர்வ சாதாரணமாக நிற்கும் புகைப்படத்தையும் அவர்கள் பதிவிட்டு வருகின்றனர். சிலரோ கோலி மட்டும் இவ்வாறு செய்வதில்லை. பல விளையாட்டு வீரர்கள் கூட இவ்வாறு செய்திருக்கிறார்கள் என தங்களின் கருத்தை பதிவிட்டுள்ளனர்.