ஒவ்வொரு நாளும் உலகில் ஆயிரம் விஷயங்கள் நடைபெறுகின்றன. அதில் முக்கியமானவையாக சிலதான் இருக்கும். அப்படி விளையாட்டில் Top 10-ல் வரும் முக்கியமான சில செய்திகளை இங்கே பார்ப்போம்.
பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் வெளியிட்டுள்ளது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் டென்மார்க் வீரர் விக்டர் ஆக்சல்சென் முதலிடத்தில் நீடிக்கிறார். இந்தியாவின், லக்சயா சென் 12வது இடத்தில் தொடர்கிறார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஒரு இடம் முன்னேறி 15-வது இடத்திற்கு நீடிக்கிறார்.
சர்வதேச கால்பந்து சங்கம் (பிபா) ஆண்டுதோறும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விருது பிரேசில் வீரரும், ரியல் மாட்ரிட் கிளப்புக்காக ஆடுபவருமான வினிசியஸ் ஜூனியருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெற்ற முதல் பிரேசில் வீரர் வினிசியஸ் ஆவார். சிறந்த வீராங்கனைக்கான விருதை ஸ்பெயின் வீராங்கனை போன்மதி தொடர்ந்து 2வது முறையாக தட்டிச் சென்றார்.
ஸ்பெயின் முன்னணி டென்னிஸ் வீரரான ரபேல் நடால் இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற டேவிஸ் கோப்பை தொடருடன் ஓய்வு பெற்றார். சர்வதேச டென்னிஸில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருந்த நடால், 14 முறை பிரஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் வென்று வரலாறு படைத்துள்ளார். ரபேல் நடாலின் 2024 சீசனின் அடிப்படையில் ஆவணப்படத் தொடரை நெட்பிலிக்ஸ் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டிகளில் இருந்து தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான கேசவ் மகராஜ் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக பிஜோர்ன் போர்டுயின் மாற்று வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டியில் இருந்து திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில், இன்று தாயகம் திரும்பினார். அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பேசிய அவர், “ஓய்வு அறிவித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சிதான். முடிந்தவரை உள்ளூர் போட்டிகளில் விளையாடுவேன். அடுத்த பயணத்தை இனி தொடங்க வேண்டும். கிரிக்கெட்டில் எனது பயணம் தொடர்ந்து இருக்கும்” எனத் தெரிவித்தார்.
டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளின் பேட்டர், பவுலர்களின் தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இதில் டி20 பவுலர் தரவரிசையில் வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து வீச்சாளர் அகில் ஹூசைன் முதலிடம் பிடித்தார். டெஸ்ட் பவுலர் தரவரிசையில் இந்திய வீரர் பும்ரா முதல் இடத்தில் நீடிக்கிறார். டி20யின் சிறந்த பேட்டராக ஆஸ்திரேலியா வீரர் டிராவிஸ் ஹெட்டும், டெஸ்ட் போட்டியின் சிறந்த பேட்டராக இங்கிலாந்தின் ஜோ ரூட்டும் முதல் இடத்தில் உள்ளனர்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி 54 ரன்களில் சுருண்டது. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை நோக்கி ஆடிய ஜிம்பாப்வே அணி ஆப்கானிஸ்தான் அணி வீரர்களின் பந்துவீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் 17.5 ஓவர்களில் 54 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து, ஆப்கானிஸ்தான் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியாவில் அடுத்த ஆண்டு கோ கோ உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. ஜனவரி 13 முதல் 19 வரை நடைபெற உள்ள இப்போட்டியில் இதுவரை 24 நாடுகள் பங்கேற்பதை உறுதி செய்துள்ளன. மொத்தத்தில் ஆடவா் பிரிவில் 21 அணிகளும், மகளிா் பிரிவில் 20 அணிகளும் களம் காண உள்ளன. அந்த வகையில், ஜனவரி 13ஆம் தேதி நடைபெறும் முதல் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத இருக்கின்றன. இப்போட்டிகள் டெல்லி மற்றும் நொய்டாவில் நடைபெற உள்ளன. இந்த உலகக் கோப்பை போட்டிக்கான விளம்பர தூதராக, பாலிவுட் நடிகா் சல்மான் கான் அறிவிக்கப்பட்டுள்ளாா்.
புரோ கபடி லீக் போட்டியின் 119வது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் 60-29 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்கால் வாரியா்ஸை வீழ்த்தியது. இரு அணிகளும் இத்துடன் தலா 20 ஆட்டங்களில் விளையாடியிருக்க, தமிழ் தலைவாஸுக்கு இது 7-ஆவது வெற்றியாகும், பெங்காலுக்கு இது 12வது தோல்வியாகவும் அமைந்தது. புள்ளிகள் பட்டியலில் அந்த அணிகள் முறையே 9 மற்றும் 10வது இடங்களில் உள்ளன.
நியூசிலாந்து ஒருநாள், 'டி-20' அணிகளுக்கு கேப்டனாக கேன் வில்லியம்சன் இருந்தார். கடந்த ஜூன் மாதம் நடந்த 'டி-20' உலகக் கோப்பைக்குப் பின் அவர் பதவி விலகினார். தற்போது இந்த இரண்டு அணிகளுக்கும் புதிய கேப்டனாக சுழற்பந்துவீச்சாளர் மிட்செல் சான்ட்னர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2020ல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 'டி-20' போட்டியில் முதன்முறையாக கேப்டனாக களமிறங்கிய சான்ட்னர், 2022ல் ஸ்காட்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணியை வழிநடத்தினார்.