2024 Aus Open Final
2024 Aus Open Final X
டென்னிஸ்

48 ஆண்டுகால வரலாற்றை மாற்றி எழுதிய 22 வயது ஜானிக் சின்னர்! AUS OPEN கிராண்ட்ஸ்லாம் வென்ற இத்தாலியர்!

Rishan Vengai

2024ம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலியா ஓபன் தொடர், கடந்த ஜனவரி 14ம் தொடங்கி நடைபெற்றுவந்த நிலையில் ஜனவரி 28ம் தேதியான இன்று முடிவை எட்டியுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆஸ்திரேலியா ஒபன் தொடரில் இந்தியாவின் ரோகன் போபண்ணா முதல் இத்தாலியின் ஜானிக் சின்னர் வரை, பல முன்னணி வீரர்கள் நம்பமுடியாத பல வெற்றிகளை பதிவுசெய்தனர்.

ரோகன் போபண்ணா, மேத்யூ எப்டன்

2024 ஆஸ்திரேலியா ஓபன் தொடரின் வெற்றியாளர்கள்:

1. ஆண்கள் ஒற்றையர் - ஜானிக் சின்னர் (இத்தாலி)

2. பெண்கள் ஒற்றையர் - அரினா சபலெங்கா (பெலாரஸ்)

3. ஆண்கள் இரட்டையர் - ரோகன் போபண்ணா, மேத்யூ எப்டன் (இந்தியா, ஆஸ்திரேலியா)

4. பெண்கள் இரட்டையர் - ஹ்சீஹ் சுவெய், எலிஸ் மெர்டென்ஸ் (தைவான், பெல்ஜியம்)

5. கலப்பு இரட்டையர் - ஹ்சீஹ் சுவெய், ஜான் ஜீலின்ஸ்கி (தைவான், போலந்து)

முதல் கிராண்ட்ஸ்லாம் வென்ற ஜானிக் சின்னர்!

ஆஸ்திரேலியா ஒபன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியானது, தரவரிசையில் 3ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ் மற்றும் 4ம் நிலை வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர் இருவருக்கும் இடையே நடைபெற்றது.

Medvedev

விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் முதல் இரண்டு செட்களில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மெத்வதேவ், 6-3, 6-3 என்ற நேர் செட்கணக்கில் வென்று முன்னிலை பெற்றார். 3வது செட்டிலும் 4-1 என மெத்வதேவ் முன்னிலை வகிக்க எப்படியும் 3 நேர் செட் கணக்கில் எளிதாக மெத்வதேவ் வெல்லப்போகிறார் என்ற எண்ணம் எல்லோருக்கும் ஏற்பட்டது. ஆனால் ஒரு அபாரமான எழுச்சியை கண்ட சின்னர் எல்லோருடைய எண்ணத்தையும் பொய்யாக்கினார்.

sinner

முதல் இரண்டு செட்களை மெத்வதேவ் கைப்பற்ற, அடுத்த 2 செட்களையும் 6-4, 6-4 என கைப்பற்றிய ஜானிக் சின்னர் ஆட்டத்தை விறுவிறுப்பான இடத்திற்கு நகர்த்தினார். கடைசி செட்டை வெல்ல விட்டுக்கொடுக்காமல் போட்டிப்போட்ட இருவரும் சீட்டின் நுனிக்கே ரசிகர்களை அழைத்துச்சென்றனர். பரபரப்பான இந்த மோதலில் கடைசி செட்டை 6-3 என வென்ற சின்னர், தன்னுடைய முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று சாதனை படைத்தார்.

48 ஆண்டுகளுக்கு பிறகு முதல் கிராண்ட்ஸ்லாம் வெல்லும் இத்தாலிய வீரர்!

ஆஸ்திரேலியா ஓபன் தொடரை வென்ற 22 வயது இத்தாலிய வீரரான ஜானிக் சின்னர், டென்னிஸ் வரலாற்றில் முதல் ஆஸ்திரேலிய ஓபனை வெல்லும் முதல் இத்தாலிய வீரர் என்ற இமாலய சாதனையை படைத்தார்.

அதேபோல் 1972ம் ஆண்டுக்கு பிறகு ஒரு இத்தாலிய வீரர் கூட இறுதிப்போட்டிக்கு முன்னேறாத நிலையில், தன்னுடைய முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரிலேயே இறுதிப்போட்டியை எட்டிய ஜானிக், 48 வருடங்களுக்கு பிறகு கிராண்ட்ஸ்லாம் வெல்லும் முதல் இத்தாலிய வீரர் என்ற மகுடத்தை சூடிக்கொண்டார்.