60 முறை தோற்று வெளியேற்றம்! 43 வயதிலும் அடங்காத கனவுப்பசி! யாரும் சூடாத மகுடம் சூடிய போபண்ணா!

கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்ல வேண்டும் என்ற விடாமுயற்சியில் 60 முயற்சிகளில் தோல்வியை சந்தித்த ரோகன் போபண்ணா, 61வது முயற்சியில் முட்டிமோதி தன்னுடைய முதல் இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளார்.
மேத்யூ எப்டன்-ரோகன் போபண்ணா
மேத்யூ எப்டன்-ரோகன் போபண்ணாX

கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்ல வேண்டும் என்ற ஆசையானது ஒவ்வொரு டென்னிஸ் வீரருக்கும் இருக்கும் மிகப்பெரிய கனவாகும். அந்த தருணத்திற்காக காத்திருக்கும் ஒவ்வொரு வீரரும், மேற்கொண்ட முயற்சியில் தோல்வியடைந்தால் விரக்தியில் வெறுத்துவிட்டு வெளியேறிவிடுவார்கள்.

ஆனால் இந்தியாவின் ரோகன் போபண்ணா கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்ல 60 முறை முயற்சிசெய்து, அதில் 5 முறை அரையிறுதியில் தோல்வி, 2 முறை இறுதிப்போட்டியில் தோல்வி ( 2010 மற்றும் 2023 அமெரிக்க ஓபன் ஃபைனல்) என பல்வேறு ஏமாற்றங்களை சந்தித்தபோதும், 43 வயதில் போராடி தன்னுடைய முதல் இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியா ஓபன் இரட்டையர் பிரிவு பைனலில் வெற்றி!

ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா மற்றும் ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி சனிக்கிழமையான இன்று, முதல்முறையாக இரட்டை பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தது.

மெல்போர்னில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய மற்றும் ஆஸ்திரேலிய இணை ரோகன்-எப்டன் ஜோடி, இத்தாலியின் சிமோன் பொலேல்லி மற்றும் ஆண்ட்ரியா வவஸ்சோரி ஜோடியை எதிர்த்து விளையாடியது.

முதல் போட்டியில் இரண்டு ஜோடிகளும் தங்களுடைய முதல் செட் வெற்றிக்காக உயிரை கொடுத்து போராடினார். முதல் செட்டே 6-6 என டைபிரேக்கருக்கு செல்ல ஆட்டம் சூடுபிடித்தது. ஆனால் டை பிரேக்கரில் 7-6 என வெற்றிபெற்ற போபண்ணா - எப்டன் ஜோடி அசத்தியது.

முதல்செட்டை இழந்த நிலையில் இரண்டாவது செட்டை கைப்பற்ற வேண்டிய வெறியில், அபாரமான ஆட்டத்தை ஆடிய இத்தாலியன் ஜோடி 2-0 என முன்னிலை பெற்று அசத்தினார். முதலில் தடுமாறினாலும் பின்னர் ஆட்டத்திற்குள் வந்த போபண்ணா ஜோடி, 7-5 என இரண்டாவது செட்டையும் கைப்பற்றி இரண்டு நேர் செட்களில் வெற்றிபெற்று ஒரு வரலாற்றை பதிவுசெய்தனர்.

இந்த ஜோடி கடந்த விம்பிள்டன் ஓபனில் அரையிறுதியிலும், அமெரிக்க ஓப்பனில் இறுதிப்போட்டிவரையிலும் சென்று தோல்வி முகத்தோடு திரும்பியது. ஆனால் அடுத்தடுத்த இரண்டு பெரிய தோல்விகளுக்கு பிறகு ஆஸ்திரேலியா ஓபன் பட்டத்தை தட்டிச்சென்று வரலாறு படைத்துள்ளது.

43 வயதில் கிராண்ட்ஸ்லாம் வெல்லும் முதல் வீரர் என்ற வரலாறு!

ஆஸ்திரேலியா ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றதன் மூலம், 43 வயது 329 நாட்கள் வயதுடைய ரோகன் போபண்ணா ஓபன் சகாப்தத்தில் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற மிக அதிக வயதான வீரர் என்ற சாதனையை படைத்தார்.

அதுமட்டுமல்லாமல் கடந்தாண்டு அமெரிக்க ஓபன் இரட்டையர் பிரிவில் ரன்னர்-அப், தற்போதைய ஆஸ்திரேலியா ஓபனில் தொடர் வெற்றி மற்றும் கிராண்ட்ஸ்லாம் பட்டத்திற்கு பிறகு, திங்கள்கிழமை அறிவிக்கப்படவிருக்கும் டென்னிஸ் இரட்டையர் பிரிவு தரவரிசையில் முதன்முறையாக போபண்ணா முதலிடம் பிடித்து சாதனை படைக்கவுள்ளார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவை பொறுத்தவரை, 22 வயது இளம்வீரர் ஜன்னிக் சின்னர், ஜாம்பவான் நோவக் ஜோக்கோவிச்சின் 33 தொடர் ஆஸ்திரேலியா ஓபன் வெற்றிக்கு முற்றுப்புள்ளிவைத்து அரையிறுதியில் அவரை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

நாளை நடைபெறவிருக்கும் இறுதிப்போட்டியில் ஜன்னிக் சின்னர் மற்றும் மெத்வதேவ் இருவரும் பட்டத்திற்காக மோதவுள்ளனர். இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவில், பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா 6-3, 6-2 என்ற செட் கணக்கில் சீனாவின் கின்வென் ஜெங்கை தோற்கடித்து தனது மகளிர் ஒற்றையர் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com