2011 உலகக்கோப்பை வென்ற அணியில் கௌதம் கம்பீர், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஜாகீர் கான், முகமது கைஃப், விவிஎஸ் லக்ஷ்மண், ராகுல் டிராவிட் ஆகியோர் முக்கிய வீரர்களாக இடம்பெற்றிருந்தனர். அந்தச் சமயத்தில், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணியுடனான தொடர் தோல்விகளால், கம்பீர், யுவராஜ், ஜாகீர் மற்றும் ஹர்பஜன் போன்றவர்கள் தேசிய அணியிலிருந்து மெதுவாக விலகினர். மறுபுறம், டிராவிட் மற்றும் லட்சுமண் ஆகியோர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றனர். அந்த நேரத்தில், இதுபோன்ற திறமையான வீரர்களையும் அவர்களின் எதிர்கால வாழ்க்கையையும் தவறாகக் கையாண்டதற்காக அப்போதைய தேர்வுக்குழுத் தலைவர் மொகிந்தர் அமர்நாத்தை, யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் கடுமையாகச் சாடியுள்ளார்.
இதுகுறித்து யோகராஜ் சிங், "அப்போது தேர்வுக் குழுவினர், கௌதம் கம்பீர், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஜாகீர் கான், முகமது கைஃப், விவிஎஸ் லக்ஷ்மண், ராகுல் டிராவிட் ஆகிய 7 வீரர்களின் வாழ்வை எந்தக் காரணமும் இல்லாமல் அழித்துவிட்டார்கள். 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர்கள் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். 2011 உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய அணியை நாசம் செய்துவிட்டார்கள். ஏழு வீரர்களின் வாழ்க்கை முடிந்துவிட்டது. அதனால்தான் அதன் பிறகு இந்திய அணி தடுமாறியது. தோனி கேப்டனாக இருந்தபோது ஐந்து தொடர்களில் இந்திய அணி தோல்வி அடைந்தது. அப்போது தோனியை பதவியில் இருந்து நீக்கப் போவதாக அப்போதைய தேர்வுக் குழுத் தலைவர் மொகிந்தர் அமர்நாத் கூறினார். ஆனால், அதை அப்படி செய்ய முடியாது. அவரது பதவி நீக்கத்தை அப்போதைய பிசிசிஐ தலைவர் தடுத்து நிறுத்தினார்" எனச் சாடியுள்ளார்.